ரஷ்யா மீது மேலும் தடைகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நடவடிக்கை

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. மறுபுறம் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து மேலும் உயிரிழப்புகள் கண்டறியப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் கடந்த வாரம் தலைநகர் கியேவின் வடக்கு நகரங்களில் இருந்து வாபஸ் பெற்ற நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுதியுள்ளது. உக்ரைன் படைகள் மீட்டுக்கொண்ட நகரங்களில் இந்த ஆறு வார போரில் பேரழிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் புச்சா நகர் மற்றும் பல வீதிகளிலும் சடலங்கள் சிதறிக் காணப்படுகின்றன.

புச்சாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் நெருங்கிய தூரத்தில் இருந்து தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட உடல்கள் சர்வதேச அளவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமை கௌன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த ஐ.நா பொதுச் சபையை அமெரிக்கா கோரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புச்சா படுகொலைகள் புட்டினைப் போர்க் குற்றவாளியாகக் கருதப் போதுமானவை என்றார் பைடன். ஆனால் இன்னும் ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டியுள்ளது என்றார் அவர்.

எனினும் பொது மக்களைக் கொன்றதான குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. இந்தக் கூற்றுக்கு எதிரான ஆதாரங்களை பாதுகாப்புச் சபையில் தாம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

மறுபுறம் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி நேற்று ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றினார். இதன்போது அவர் புச்சா நகரில் இடம்பெற்றிருக்கும் கொலைகள் தொடர்பில் விசாரணை ஒன்றுக்கு ஆதரவு திரட்டினார்.

நேற்றுக் காலை வீடியோ மூலம் உரையாற்றிய செலென்ஸ்கி, 'இது ஒரே ஒரு நகர் தான். ரஷ்யப் படைகள் கைப்பற்றிய பல உக்ரைனிய பகுதிகளில் ஒன்றாகவே இது உள்ளது. பிரோடியன்கா மற்றும் ஏனைய உக்ரைனிய நகரங்களில் உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என்று தற்போது தகவல்கள் கிடைக்கின்றன' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புட்டின் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் புச்சா நிகழ்வுகளின் விளைவுகளை உணர்வார்கள் என்று ஜெர்மனி சான்சலர் ஒலாப் ஸ்கோல்ஸ் எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்க மேற்கத்திய கூட்டணி இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் புதிய தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவன் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி குறிப்பிட்டுள்ளன.

இதற்கு ரஷ்யா பதலளிக்கும் என்றும் மேற்கத்திய தூதரகங்களின் கதவுகள் இழுத்து மூடப்படும் என்றும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்புச் சபையின் பிரதித் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் குறிப்பிட்டுள்ளார்.

'இது எல்லோருக்கும் லேசானதாக இருக்கும். பின்னர் எல்லோரும் வேறு வழி இல்லாமல் துப்பாக்கி முனையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கும்' என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய எரிவாயுவை தடை செய்வது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லம்ப்ரட்ச் தெரிவித்துள்ளார். எனினும் இது ஐரோப்பாவில் பெரும் எரிசக்தி பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் ஏனைய அதிகாரிகள் இது பற்றி அவதானத்துடனேயே கருத்து வெளியிடுகின்றனர்.

ஐரோப்பிய எரிவாயுவின் மூன்றில் ஒரு பகுதியை ரஷ்யாவே வழங்குகிறது. மேற்கத்திய தடைகளுக்கு எதிராக இதனை பயன்படுத்த புட்டின் முயன்று வருகிறார். எனினும் ரஷ்யா ஐரோப்பாவுக்கான குழாய்கள் வழியாக தொடர்ந்து எரிவாயுவை விடுவித்து வருகிறது. எரிவாயுவுக்கு தமது சொந்த நாணயமான ரூபிளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புட்டின் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பில் நிச்சயமற்ற சூழல் நீடித்து வருகிறது.

இதேவேளை உக்ரைனின் கிழக்கில் ரஷ்யாவின் தாக்குதலுக்காக சுமார் 60,000 ரஷ்ய மேலதிக துருப்பு தயார் நிலையில் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா மரியுபோல் மற்றும் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் உட்பட கிழக்கு பக்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

Wed, 04/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை