உக்ரைனிய நகர வீதிகளில் சிதறிக்கிடக்கும் சடலங்கள்

ரஷ்யா மீது குற்றச்சாட்டு

உக்ரைன் தலைநகர் கியேவின் புறநகரான புச்சாவில் ரஷ்யப் படையினர் பொதுமக்கள் பலரைப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு ரஷ்யத் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

குறைந்தது 20 சடலங்கள் புச்சா வீதிகளில் வீசி எறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிலரது கைகளும் கால்களும் கட்டிவைக்கப்பட்டிருந்தன. சிலர் தலையின் பின்பகுதியில் சுடப்பட்டிருந்தனர்.

ரஷ்ய இராணுவத்தால் சுமார் 300 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர் என்று புச்சா மேயர் கூறினார்.

இங்கு 410 பேர் கொன்று புதைக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதில் கிறிஸ்தவ ஆலயம் அருகே 45 அடி நீள புதைக்குழியில் 280 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதி புதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உடல்களில் பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தப் படுகொலையை மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கப்போவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சூளுரைத்தார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அன்ட்டனி பிளிங்கன், கொடுமையான காட்சிகள் தம்மை வருத்தமடையச் செய்வதாகக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

எனினும் கொடூரச் செயல்களைக் காட்டும் வீடியோக்கள் பொய்யானவை என்று ரஷ்யா கூறியுள்ளது. புச்சாவில் ரஷ்ய துருப்புகள் இழைத்த குற்றங்கள் என கூறி உக்ரைன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் 'ஆத்திரத்தைத் தூண்டுபவை' என்றும் புச்சாவில் ரஷ்ய துருப்புகளால் எந்த வன்முறையும் இடம்பெறவில்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த குடியிருப்பாளர்களின் கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் என்பது பற்றி சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் மூன்று சடலங்களை கடந்த ஞாயிறன்று கண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு சடலமும் இரு சடலங்கள் கைகள் கட்டப்படாத நிலையில் இருந்ததோடு தலையில் துப்பாக்கிக் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாத கலமாக ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்த புச்சா நகரில் இருந்து கடந்த வாரம் ரஷ்யப் படை பின்வாங்கியது. அங்கு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் ஆரம்பித்தது தொடக்கம் அதன் பாதிப்பை இதுவரை 3,455 பொதுமக்கள் அனுபவித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 1,400 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 2,000 க்கும் மேற்பட்ட காயம் அடைந்தவர்கள் அடங்குவர். இந்த எண்ணிக்கை கொஞ்சம் பழையதுதான் என்றாலும் உண்மையான புள்ளிவிவரங்கள் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Tue, 04/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை