பொதுமக்கள் நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் வன்முறை கும்பல்கள்

நாட்டை சீரழிக்க ஒரு போதும் இடமளிக்க முடியாது

 

மக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தாலும் குழப்பங்களை ஏற்படுத்தும் கும்பல்கள் உள்ளே புகுந்து வன்முறையாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் நாட்டை அழிவுக்கு உட்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் கருத்து தெரிவித்த போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டு மக்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை காரணமாக வைத்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதை  நாம் மதிக்கின்றோம். எனினும் நாட்டை அழிவுக்குள்ளாக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. கடந்த சில தினங்களாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை நோக்கும்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மதுபானத்தை வழங்கி வீதியில் இறக்கியுள்ளனர். அதன் மூலமே குழப்பமான நிலை தோற்றுவிக்கப்பட்டு வருகிறது. இது நாட்டுக்கான தவறான முன்னுதாரணமாகும். நாடு பெரும் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது. சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. அதனால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்து வருகிறது இதனை எவரும் உணராமல் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 04/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை