முன்மாதிரியாக செயற்படுவது என் முன்னாலுள்ள பொறுப்பு

பதவி விலகல் குறித்து ஜீவன் கருத்து

 

நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சிறந்த முன்மாதிரியாக செயற்பட வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு  என தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் , இவ்வாறானதொரு சூழ்நிலையில் சரியான தருணத்தில், சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றோம் என தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை நீக்கிக் கொள்வதற்காகவும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவிருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்ததுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இவ்விடயம் குறித்து தெளிவுப்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டிருந்தோம்.அதனை தொடர்ந்து இன்றைய தினம் (நேற்று) அரசாங்கத்திற்கு இதுவரை காலமும் வழங்க வந்த ஆதரவை நீக்கிக்கொள்வதற்கு தீர்மானித்ததுடன், எனது இராஜாங்க அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்துள்ளேன்.

இதனையடுத்து என்னை இழிவுப்படுத்தும் வகையிலான வதந்திகள் பரப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ஆனால் உண்மையில் சரியான விடயத்தை செய்ய வேண்டும் என்பதற்காகவே இத்தீர்மானத்தை முன்னெடுத்தோம். அதற்கு மேலாக அண்மைய காலங்களில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.எனவே அவ்வாறு இருக்கையில் இளம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் ஒரு சிறந்த முன்மாதிரியாக செயற்பட வேண்டியது அவசியமானது. எனவே கடினமான தருணங்களிலும்,நெருக்கடிகளின் போதும் நாம் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

(கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்)

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை