இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; இன்று வாக்கெடுப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுத்தது சட்டவிரோதம் என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியை சந்திப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது ஆளும் கட்சி அந்த வாக்கெடுப்பை முடக்கியது.

தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்த அவரது அரசு திடீர் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது.

கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த இம்ரான் கான், ‘பாகிஸ்தானுக்காக நான் தொடர்ந்து போராடுகிறேன். கடைசிப் பந்து வரை நான் போராடுவேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வியாழக்கிழமை அரசு சட்டக்குழுவினரை சந்தித்த இம்ரான் கான் உச்சநீதிமன்றம் அறிவிக்கும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்வோம் என்றும், எந்த வெளிநாட்டுச் சதியையும் வெற்றியடைய விடமாட்டோம் என்றும் கூறியிருந்தார்.

இந்தத் தீர்ப்பை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த பல டஜன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷெஹ்பாஸ் ஷரீப் உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தார்.

எனினும் சீற்றமடைந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் அமெரிக்க எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதோடு, கலகமடக்கும் பொலிஸார் இரு தரப்பையும் பிரிக்கும் வகையில் நிலைகொண்டனர்.

இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி வாக்கெடுப்புக்கான செயற்பாட்டை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மோசமான தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு இம்ரான் கான் தமது பதவியை இராஜினாமா செய்யும் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கானை பதவி நீக்கிய பின் அடுத்த தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் 2023 ஓகஸ்ட் மாதம் வரை புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஊழல் மற்றும் பதவியில் இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆட்சியில் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை மாற்றுவதாக கூறி 2018ஆம் ஆண்டு பதவியேற்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். வருக்கு ஆதரவாளர்கள் உள்ளனர் என்றபோதும், விலையேற்றம் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் பெரும்பான்மையான மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளார். கடந்த வாரம் தனது பாராளுமன்ற பெரும்பான்மையையும் இழந்தார்.

எந்தவொரு ஆட்சிக்கும் மிகப்பெரிய துணையாக இருக்கக்கூடிய இராணுவத்தின் ஆதரவையும் கூட இம்ரான்கான் இழந்துவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பாகிஸ்தானில் நிலவும் அரசியல் கொந்தளிப்பின் மற்றொரு பகுதியையும் குறிப்பிடுகிறது.

இதுவரை, ஊழல் குற்றச்சாட்டுகள், இராணுவத்தின் அதிகாரபோட்டி என ஏதோ ஒரு காரணத்தால், எந்தவொரு பிரதமரும் முழுமையாக தனது பதவிக்காலத்தை முடித்ததில்லை. 75 ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தானில் 33 ஆண்டுகள் இராணுவ ஆட்சிதான் நடைபெற்றுள்ளது.

Sat, 04/09/2022 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை