அலரிமாளிகைக்கு அருகில் அமைதியின்மையால் குழப்பம்

காயமடைந்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொள்ளுப்பிட்டியில் அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்படும் போராட்டத்தில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மை, குழப்பம் காரணமாக ஒருவர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், பொது மக்களென பலர் கலந்து கொண்டு பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இங்குள்ள போராட்டக்கார்களுக்கு எதிராக, இப் பகுதியின் நடைப்பாதைகளில் பொலிஸார் பஸ்கள் உள்ளிட்ட பொலிஸ் வாகனங்களையும் நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் நேற்றுக் காலை இப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுவதற்கு கொள்ளுபிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர், இப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறுப்படுத்துமாறு கோரியிருந்தனர். எனினும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்பது தெரியாததால் அதனை அப்புறப்படுத்த முடியாதென பொலிஸார் தெரிவித்திருந்ததாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்தநிலையிலேயே நேற்று இப் பகுதிக்கு சென்ற பொலிஸார் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போது, வாகனங்களின் உரிமையாளர்கள் இத் தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

இதன்காரணமாக பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, இப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தன்மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நபர் அம்பியூலன்ஸின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

எனினும், பொலிஸார் இப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை தாங்கள் யாரும் காணவில்லையென அங்குள்ள சிலர் தெரிவித்தனர்.

 

 

Sat, 04/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை