மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிக்கு உக்ரைன் அழைப்பு

மரியுபோல் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் எதிர்பார்க்கப்படும் கிழக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு மேற்கத்திய நாடுகளிடம் இருந்து உக்ரைன் மேலும் ஆயுத உதவிகளை கோரியுள்ளது.

கடந்த ஏழு வாரங்களுக்கு மோலான முற்றுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படும் துறைமுக நகரான மரியுபோலில் புதிய தாக்குதல் ஒன்றுக்காக கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா தனது துருப்புகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கடந்த திங்கட்கிழமை பின்னேரம் தனது தொலைக்காட்சி உரையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

“அத்தியாவசிய ஆயுதங்களை பொறுத்தவரை நாம் இன்னும் எமது பங்காளிகளிடம் தங்கியுள்ளோம். துரதிருஷ்டவசமாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான, குறிப்பாக மரியுபோல் முடக்கத்தை விடுவிக்க, போதுமான ஆயுதங்கள் எமக்கு கிடைக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பை ஆரம்பித்த பின் முதல் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக ஆஸ்திரிய சான்சலர் கார்ல் நெஹம்மர், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மொஸ்கோவில் சந்தித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலுக்கு தயாராகி இருப்பதாக அவர் இந்த சந்திப்புக்குப் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கியேவின் புறநகர் பகுதிகளில் பெரும் இழப்பை சந்தித்த பின் ரஷ்யப் படை அங்கிருந்து பின்வாங்கியது. இந்நிலையில் ரஷ்யா டொன்பாஸ் பக்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இங்கு உக்ரைன் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டை பலப்படுத்த ரஷ்யா திட்டமிடுகிறது. இங்கு மரியுபோல் நகரை கைப்பற்றி கிழக்கில் உள்ள பிரதான உக்ரைன் படைகளை சுற்றிவளைக்க ரஷ்யா முயற்சித்து வருகிறது.

மரியுபோல் நகரை கைப்பற்றும் முயற்சிக்கு அப்பால், லுஹான்ஸ்கில் இருந்து மேற்காக இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் பொபாசானவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், டொனட்ஸ்க் பிராந்தியத்தில் குராகொவ் பக்கம் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாகவும் உக்ரைன் ஆயுதப் படைகளின் பொதுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Thu, 04/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை