பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்ட இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்

பாராளுமன்றத்தை கலைக்கவும் அறிவுறுத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் சட்டவிரோதமானது என்று கூறி தடுத்ததை அடுத்து அவர் பதவி நீக்கப்படுவதில் இருந்து தப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைக்கும்படி இம்ரான் கான் அந்நாட்டு ஜனாதிபதியை கோரியுள்ளார். இதன்மூலம் 220 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அணு ஆயுத நாடான பாகிஸ்தானில் அரசியல் ஸ்தரமற்ற சூழல் தீவிரம் அடைந்துள்ளது.

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், ஆளும் பாகிஸ்தான் தஹ்ரீகே இன்சாப் கட்சியைச் சேர்ந்த தேசிய பேரவையின் பிரதி சபாநாயகர், அந்த நடவடிக்கையை தடுத்தார். அரசியலமைப்பின் 5ஆம் பிரிவை இது மீறுவதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிவு 5க்கு அமைய, 'தேசத்திற்கு விசுவாசத்தை காட்டுவது அனைத்து பிரஜைகளினதும் அடிப்படை கடமை' என்றும் 'அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்குக் கீழ்ப்படிவது என்பது ஒவ்வொரு குடிமகன் எங்கிருந்தாலும் மற்றும் பாகிஸ்தானுக்குள் இருக்கும் மற்ற ஒவ்வொரு நபரின் (மீற முடியாத) கடமையாகும்' என்றும் குறிப்பிடப்படுவதாக பாகிஸ்தான் செய்தி இணையதளமான 'டோன்' தெரிவித்துள்ளது.

'ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் கிடைத்த உடன், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அரச தொலைக்காட்சியான பீ.டிவியில் நேரடியாக உரையாற்றிய இம்ரான் கான் தெரிவித்தார்.

'நம்பிக்கையில்லா தீர்மானம் நடத்தப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலவால் பூட்டோ சர்தாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'இந்த சட்ட மீறல் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாம் நாடியுள்ளோம்' என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்ட நிலையில், இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற தமக்கு பெரும்பான்மை இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இதன்போது 342 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலுக்கு வந்த இம்ரான் கானை நீக்குவதற்கு எதிர்க்கட்சிக்கு சாதாரண பெரும்பான்மையான 172 வாக்குகள் இருந்தால் போதுமாக இருந்தது.

இந்நிலையில் இம்ரான் கானின் அளும் கட்சியின் சிறிய கூட்டணி கட்சிகள் மற்றும் அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் நேரப்படி நேற்றுக் காலை 11.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 5க்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

இதையடுத்து, ஏப்ரல் 25ஆம் திகதி வரை பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் அசாத் குவைசர் நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில்தான் துணை சபாநாயகர் தற்காலிக சபாநாயகராக செயல்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

தம் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதி என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உதவியோடு ஒரு வெளிநாட்டு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறிய இம்ரான் கான், இதனை உறுதி செய்யும் அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றை தேசிய பாதுகாப்பு குழுவும், அமைச்சரவையும் பார்த்துள்ளன என்றும், அதில், இம்ரான் கானை பதவி நீக்கினால், பாகிஸ்தானோடு அமெரிக்காவின் உறவு மேம்படும் என்றும், பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று பிரதமர் பரிந்துரைத்தால் அதை ஜனாதிபதி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அப்படி நடக்கும்பட்சத்தில், அடுத்த தேர்தல் நடத்தி முடிவுகள் வரும் வரை நாட்டு நிர்வாகத்தைக் கவனிக்க இடைக்கால பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

69 வயதான இம்ரான் கான், ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடும், சில வாக்குறுதிகளோடும் 2018 இல் ஆட்சிக்கு வந்தார்.

ஆனால், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது, போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஊழலைத் துடைப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அவர், விண்ணை முட்டும் பணவீக்கம், முடக்கப்பட்ட கடன் போன்ற நிர்வாகச் சுமைகளால் ஆட்சியை நடத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்கவைக்கவே போராடினார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இராணுவ பலம் இருந்துவரும் நிலையில், இம்ரான் கான் இராணுவத்தின் ஆதரவையும் இழந்துவிட்டார் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இதற்கு முன் இரு முறை பதவியில் உள்ள பிரதமர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளன. 1989 இல் பெனாசிர் பூட்டோவுக்கும் 2006 ஆம் ஆண்டு சவ்கத் அசிசுக்கும் எதிராகக் கொண்டுவரப்பட்ட அந்தத் தீர்மானங்கள் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போதைய இழுபறி சூழல் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது பற்றி தெளிவில்லாத நிலை உள்ளது.

தலைநகர் இஸ்லாமாபத்தை சூழவிருக்கும் அரச கட்டடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 04/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை