சஹரான் ஹாசிம் உபயோகித்த வாகனம் தொடர்பில் சபையில் நேற்று சர்ச்சை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்டுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பதிவால் நேற்று சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில்நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விடயம் ஒன்றை முன்வைத்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் பயன்படுத்திய வாகனத்தை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான ரங்க சிறிலால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், கார் ரக வாகனத்தின் படத்தை பொறித்து, லேன்ட் குறூஸ்சர் ரக இந்த கார் வழக்கு சான்றுப் பொருளாக நீதிமன்றத்தின் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற போதிலும் அதனை எப்படி அரசியல்வாதி ஒருவர் பயன்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த சரத் வீரசேகர அதற்கு பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதன்போது எழுந்த  முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர . இந்த செய்தி தொடர்பில் நானும் அறிந்தேன். அது தொடர்பில் எனது செயலாளரிடமும் வினவினேன்.அந்த வாகனம் அரசுடைமையாக்கப்பட்ட வாகனம். சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய அந்த வாகனத்தை நான் பயன்படுத்தவில்லை. ஆனால் எனது அமைச்சின் கீழிருந்த விசேட செயலணியின் பாவனைக்கு அந்த வாகனம் வழங்கப்பட்டிருந்தது என்றார். இதன்போது எதிர்க்கட்சியினர் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதன்போது எழுந்த மனுஷ நாணயக்கார எம்பி, சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய அந்த வாகனம் ஒரு நீதிமன்ற சான்றுப்பொருள்,அதனை எப்படி அமைச்சரோ அவரின் விசேட செயலணியோ பயன்படுத்த முடியும் எனக்கேள்வி எழுப்பினார்.

அதனைத்தொடர்ந்து அனுரகுமார திசாநாயக்க எம்பி சஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெறுகின்றது. அவர் பயன்படுத்திய வாகனம் நீதிமன்ற சான்றுப்பொருளாக இருக்கும்போது எப்படி அதனை பயன்டுத்த முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.

லோரன்ஸ் செல்வநாயகம் ஷம்ஸ் பாஹிம்

Wed, 04/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை