உக்ரைனிய தலைநகரில் ஐ.நா தலைவர் இருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்

தோல்வியை ஒப்புக்கொண்டார் குட்டரஸ்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டொனி குட்டரஸ் உக்ரைன் தலைநகர் கியேவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு ரொக்கெட் தாக்குதல் இடம்பெற்றுள்ளதை அடுத்து அவர் தனது அமைப்பைச் சேர்ந்த பாதுகாப்புச் சபையை கண்டித்துள்ளார்.

பாதுகாப்புச் சபை உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர தவறியுள்ளது என்று குட்டரஸ் தெரிவித்துள்ளார். இது ஏமாற்றம், கோபம் மற்றும் வேதனைக்குக் காரணமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

‘இந்தப் போரைத் தடுப்பது மற்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதன் அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்’ என்றார் அவர்.

15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது.

ஆனால் கடந்த பெப்வரியில் இருந்து இடம்பெற்றுவரும் போரை தடுப்பதற்கு தவறியது குறித்து உக்ரைனிய அரசு உட்பட பாதுகாப்புச் சபை கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

ரஷ்யா பாதுகாப்புச் சபையின் நிரந்தரக அங்கத்துவத்தை பெற்றிருப்பதோடு அது இந்த போர் தொடர்பில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் இணைந்து கடந்த வியாழக்கிழமை நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் குட்டரஸ் பேசினார். எனினும் இந்த சந்திப்புக்கு முன்னதாகவே பாதுகாப்பு சபையை விமர்சித்தார்.

‘உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மக்களை நாம் கைவிடமாட்டோம் என்பதை கூறவே நான் இங்கு வந்துள்ளேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபையை பாதுகாத்து பேசிய குட்டரஸ், பாதுகாப்புச் சபை முடங்கியபோதும் ஐ.நா வேறு நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்தார்.

‘ஐ.நாவின் 1,400 உறுப்பினர்கள் உக்ரைனில் உள்ளனர். அவர்கள் உதவிகள், உணவுகள், பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகின்றனர்’ என்றார்.

ஐ.நா தலைவரின் வருகையின்போது கியேவின் மத்திய செவ்சன்கோ மாவட்டத்தில் மூன்று வெடிப்புகள் இடம்பெற்றன. இதில் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நரக மேயர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையை அவமானப்படுத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாய் உக்ரைனிய ஜனாதிபதி செலென்ஸ்கி கூறினார்.

ரஷ்யா போர் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் பல இடங்களையும் குட்டரஸ் பார்வையிட்டார். எனினும் உக்ரைனின் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது.

அங்கு புச்சா நகரில் ரஷ்ய படைகள் ஏராளமானோரை கொன்று புதைத்துள்ள புதைகுழிகளை பார்வையிட்டு வேதனை தெரிவித்த அவர், இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், ரஷ்யா இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி முயற்சியாகவே குட்டரஸ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவர் ரஷ்யா சென்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உக்ரைனின் தெற்குத் துறைமுக நகரான மரியுபோலின் நிலைமை குறித்து குட்டரஸும் உக்ரைனிய ஜனாதிபதி செலென்ஸ்கியும் பேசியுள்ளனர்.

போர் ஆரம்பித்ததில் இருந்து கடுமையாகத் தாக்கப்படும் மரியுபோலில் உள்ள உருக்கு ஆலையில் ஆயிரக்கணக்கான படை வீரர்களும் பொதுமக்களும் சிக்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்க ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும் என்று செலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

குட்டரஸ் அது குறித்து இவ்வார ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேசினார்.

உருக்கு ஆலையில் இருப்பவர்களை மீட்க ஐ.நாவுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் புட்டின் கொள்கையளவில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ரஷ்யப் படையினர் அந்த ஆலையைத் தொடர்ந்து தாக்குவதால் உக்ரைனிய உள்ளூர்த் தளபதி ஒருவர் உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆலைக்குள் வீரர்கள், பொது மக்களோடு காயமுற்ற சுமார் அறுநூறு பேரும் இருப்பதாக அந்தத் தளபதி கூறுகிறார்.

Sat, 04/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை