இரண்டாம் சுற்றில் மக்ரோனுடன் மரின் லே பென் மீண்டும் போட்டி

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் பதவியில் உள்ள ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் வெற்றிபெற்றுள்ளதோடு, ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் தீவிர வலதுசாரியான மரின் லே பென் அவருடன் மீண்டும் ஒருமுறை போட்டியிடவுள்ளார்.

'தவறிழைத்துவிடாதீர்கள் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்று கொண்டாட்டத்தில் ஈடுபடும் தமது ஆதரவாளரிடம் மன்ரோன் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் மக்ரோன் முன்னிலை பெற்றிருந்தபோதும் முடிவை தீர்மானிக்கும் இரண்டாவது சுற்று தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

'பிரான்ஸில் மீண்டும் ஒழுங்கை கொண்டுவர' மக்ரோனுக்கு வாக்களிக்காத அனைவரும் தம்முடன் இணையும்படி லே பென் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் 97 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முதல் சுற்றிலேயே ஜனாதிபதியாக தேர்வு பெறுவதற்கு தேவையான 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை எந்த வேட்பாளரும் பெறவில்லை.

இதில் மக்ரோன் 27.6 வீதமான வாக்குகளையும் லே பென் 26.41 வீதமான வாக்குகளையும் பெற்றதோடு ஜீன் லுக் மெலென்சோன் 21.95 வீத வாக்குகளை வென்று மூன்றாவது இடத்திற்கு வந்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரான தேர்தலை விடவும் அதிக வாக்குகளை பெற்றிருக்கும் மெலென்சோன் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பன்னிரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் மூவர் மாத்திரமே 10 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை வென்றுள்ளனர்.

இந்நிலையில் முதல் சுற்றில் முதல் இரு இடங்களையும் பெற்ற மக்ரோன் மற்றும் லே பென் இரண்டாவது சுற்று தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இந்த இருவருமே இரண்டாவது சுற்றில் போட்டியிட்டனர்.

அதில் 44 வயதான மக்ரோன் 66.10 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Tue, 04/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை