சகல கட்சிகளையும் உள்ளடக்கி புதிய இடைக்கால அரசாங்கம்

  • ஆளும் கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு
  • ஓரிரு தினங்களில் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வுகாணும் வகையில் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று ஆளும் கட்சித்தலைவர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு தவறாது சமுகமளிக்குமாறும் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தமது கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை வந்து சமர்ப்பிக்குமாறும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏற்கனவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அந்தக் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாணும் வகையில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இணக்கம் தெரிவித்திருந்தார். தமது இணக்கப்பாட்டை அவர் சகல கட்சிகளுக்கும் தெரிவித்திருந்தார்.

அதன்படி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை இராஜினாமா செய்தபின் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்காலம், அதன் பொறுப்புக்கள், பொறுப்புகளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன குழுவில் உள்ளடங்கும் கட்சித் தலைவர்கள் ஆகியோருடனான பேச்சுவார்த்தை இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

அந்தவகையில் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தமது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எடுத்துவரும்படி ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தீர்வுகாணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள், கர்தினால் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.

அந்த வேண்டுகோளையடுத்து சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் தாம் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக கட்சித் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அவர் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து அதுதொடர்பில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தை நேற்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.

அதேவேளை, ஆளும்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளதுடன் அதனையடுத்து ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் .(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 04/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை