ட்விட்டரை 44 பில். டொலருக்கு வாங்குகிறார் எலொன் மஸ்க்

உலகின் பெரும் செல்வந்தரான எலொன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்குவதற்கு ட்விட்டர் நிறுவன நிர்வாக சபையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ட்விட்டரை வாங்கும் அதிர்ச்சி தரும் முயற்சி ஒன்றை மஸ்க் ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பித்தார். எனினும் அதனை முறியடிக்க ட்விட்டர் நிர்வாக சபை ஆரம்பத்தில் முயன்றது. எனினும் இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அந்த நிறுவனம் பங்குதாரர்களை கேட்கவுள்ளது.

ட்விட்டர் தளத்தைப் பெறுவதற்கான மஸ்க்கின் முன்மொழிவைத் தீர ஆராய்ந்த பின்னர் அதை அவரிடமே விற்க முடிவெடுக்கப்பட்டது என்று நிர்வாகக் குழுத் தலைவர் பிரட் டெய்லர் கூறினார்.

ட்விட்டர் “மிகச்சிறந்த திறன்களை” கொண்டிருப்பதாகவும் அதனை தான் வெளிக்கொண்டு வரவிரும்புவதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார்.

மேலும், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் அவர் கடந்த சில தினங்களாக கருத்து வெளியிட்டு வந்தார். அதில், ட்விட்டர் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி ட்விட்டர் கணக்குகளை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

ட்விட்டரில் 9.2 வீதமான பங்குகளை வைத்துள்ள மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய பின்னர் அது ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாக இல்லாமல் தனியார் நிறுவனமாக ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்தப் போவது யார் என்பது போன்ற விபரங்கள் இப்போது வெளியாகவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது, ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) பராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். 

இதனிடையே ட்விட்டர் ஊழியர்களுடன் கேள்வி–பதில் அமர்வில் எலொன் மஸ்க் பங்கேற்பார் என தெரிகிறது. இதனை ஊழியர்களிடம் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் வழங்குகிறது என்பதே மஸ்க் வைக்கும் புகார். இதற்கு மாற்றாக முதலில் வேறு ஒரு செயலியை அவர் உருவாக்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் ட்விட்டர் நிறுவனத்தையே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்ற முடிவை மஸ்க் எடுத்தார். அதன் பொருட்டே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 வீத பங்குகளை மஸ்க் வாங்கினார்.

இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு உடன் இதற்கு முன் வரை மின்சார வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளார்.

Wed, 04/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை