அபிவிருத்தி செயற்பாடுகளை தவிர்த்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும்

சர்வ கட்சி மாநாட்டில் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

 

அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுத்தி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. எம். ஏ .சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும்போது அரசின் திட்ட வரைபு ஒன்றை கொண்டு செல்வது முக்கியமென்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். அதற்காக தமது 12 உறுப்பினர்கள்  ஒன்றிணைந்து தயாரித்துள்ள யோசனை வரைபு ஒன்றை அரசாங்கத்திற்கு கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் பெரும் கஷ்டமான நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களை அதில் இருந்து மீட்பதற்காக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரித்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே சுமந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சர்வகட்சி மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுத்தி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கவேண்டும் .

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கத்துடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தலைமையிலான சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொண்டது.

இத்தகைய சர்வ கட்சி மாநாடு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாகவே நடத்தப்பட்டிருக்கவேண்டும். எனினும் காலம் தாழ்த்தப்பட்டு இந்த மாநாட்டை அரசாங்கம் கூட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்திலாவது இந்த மாநாடு கூட்டப்பட்டு அதற்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் .

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

நேற்றைய தினமும் கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் வடக்கிலிருந்து 16 பேர் படகு மூலம் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நாட்டிலிருந்து மேலும் மக்கள் வெளியேறுவர்.

இந்த நிலையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்களுடன் பேசவேண்டிய தேவை உள்ளதாலேயே நாம் சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொண்டோம். நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வுகாண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை