இலங்கையில் முதலீடு செய்ய எந்தத் தடைகளும் கிடையாது

வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க அரசு தயார் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு

புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாரென வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இலங்கையில் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தொழில்நுட்ப மூலமான நேரடிக்கலந்துரையாடல் நிகழ்வில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே, வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வடக்கின் அபிவிருத்தி முதலீடுகள் உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில், பல்வேறு கேள்விகள்எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர்: பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தையொன்று அது தொடர்பில் இன்று நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் வடக்கு, தெற்கு என எந்த பாரபட்சமுமின்றி அனைவருக்கும் சமமாகப் பெற்றுக்கொடுக்கப்படும். அதில் எந்த வேறுபாடுகளுக்கும் இடம் கிடையாதென்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 40,000 அரச ஊழியர்கள் உள்ளனர்.

அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் சேவைகளை மக்களுக்கு முறையாக கிடைக்கச் செய்து அரசாங்கம் மீதான நம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. எனினும் சில குறைபாடுகள் உள்ளன. வடக்கில் கல்வி சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் போன்ற துறைகளில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் மக்களிடம் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு அவர் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். (ஸ)

லோரன்ஸ் செல்வலநாயகம்

Tue, 03/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை