மருந்து, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை

அரசு ஒருபோதும் இடமளிக்காது என்கிறார் கெஹலிய

நாட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தட்டுப்பாடின்றி கொள்வனவு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் இரண்டு காலாண்டுகளுக்கான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் தற்போதைய சூழ்நிலையில் வைத்தியசாலை கட்டமைப்பில் மின் துண்டிப்பு இடம்பெற்றாலும் ஜெனரேட்டர் மூலம் போதிய மின்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எதிர்க்கட்சி எம்பி ரோஹண பண்டாரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

தேசிய மருந்து உற்பத்தியை 30வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெரசிட்டமோலுக்கு சிறியளவில் தட்டுப்பாடு காணப்பட்டாலும் தற்போது அந்த நிலை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கான தட்டுப்பாடு ஏற்படுமானால் அது வங்கி நாணய கடிதம் திறப்பதிலேயே இடம்பெறவேண்டும்.

எவ்வாறாயினும் அது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளருடனும் கலந்துரையாடியுள்ளோம் என்றார்.

 

 லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை