திங்கள் முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு

- இம்மாதம் 1,72,000 மெ. தொன் டீசல் தயார் நிலையில்
- மின்சாரம், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் நாளை சனிக்கிழமை தீர்க்கப்படுவதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமை நிலைமைக்குத் திரும்புமென எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே.டி.ஆர். ஒல்கா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சின் செயலாளர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கவும் கலந்து கொண்டார். ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக மாநாட்டில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு டீசலுடன் கப்பலொன்று வந்துள்ளதாகத் தெரிவித்த அவர் இம்மாதத்தில் மேலும் 04 கப்பல்களில் 1,72,000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளதாகவும் அவற்றை நாடு முழுவதும் மிகத் துரிதமாக விநியோகிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அதேபோன்று மின் உற்பத்திக்குத் தேவையான உராய்வு நீக்கி எண்ணெய்யுடன் இன்னும் 30 மெற்றிக் தொன் எண்ணெய் கிடைத்திருப்பதாகவும் அவற்றினூடாக உராய்வு நீக்கி எண்ணெய் பயன்படுத்தப்படும் வெஸ்ட் கோஸ்ட் போன்ற மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாக இயக்குவதற்கு முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் எதிர்வரும் 20 திகதி மேலும் ஒரு கப்பல் உராய்வு நீக்கி எண்ணெய்யுடன் வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு தேவையான எரிபொருட்கள் கிடைத்தவுடன் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்சார நெருக்கடி முற்றாக நீங்குமென்றும் அவர் தெரிவித்தார்.

எங்களது திட்டங்களின் பிரகாரம் தேவையான டொலர்களை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் தொடர்ந்தும் இது தொடர்பில் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றனர் என்றும் செயலாளர் தெரிவித்தார்.

எரிசக்தித் துறை தொடர்பில் எதிர்காலத்திட்டங்கள் பற்றி விளக்கமளித்த செயலாளர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் புதப்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்பினூடாக அல்லாமல் வடக்கு, வட மத்திய, பதுளை போன்ற பிரதேசங்களுக்கு எரிபொருள் விநியோகம் திருகோணமலையிலிருந்தே நேரடியாக செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். இதனூடாக மாதாந்தம் 800 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுவது தொடர்பில் அவரிடம் வினவிய போது, எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஒரு பேச்சு இருந்து வருகிறது. இது தொடர்பில் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய வியடம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக உள்ளூரிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணத்தினால் அநேகமானோர் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியதும் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகும்.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்காக பாரிய டொலர் தொகையொன்றை செலுத்த வேண்டியுள்ளது. எரிபொருள் பாவனையை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதனூடாக நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

Fri, 03/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை