'நெருப்பில் எண்ணெய் ஊற்றும்' செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

உக்ரைனில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த ஒரு செயற்பாட்டையும் சீனா எதிர்ப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இடம் சீன வெளியுறவு அமைச்சர் வங் யி தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் மற்றும் இறைமைக்கு ஆதரவான கொள்கை பக்கம் நிற்கும் நாடுகளை அவதானித்து வருவதாக பிளிங்கன் இதன்போது கூறியுள்ளார். இந்த இருவரும் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடியதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

உடனடி நெருக்கடியை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த வங், சமநிலையான ஐரோப்பிய பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவதாகவும் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நேட்டோவின் கிழக்கு பக்கமான விரிவாக்கத்தால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதகமான தாக்கத்தை பற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக உலகம் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் ரஷ்யா அதிக விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்றும் பிளிங்கன் கூறியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகள் செயற்படுத்தும் தடைகளில் இருந்து சீனா விலகி நிற்கிறது. இந்தத் தடைகள் புதிய பிரச்சினைகளையும் அரசியல் தீர்வுக்கான செயற்பாட்டில் இடையூறையும் ஏற்படுத்தும் என சீனா கூறுகிறது.

Mon, 03/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை