ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மூன்றாவது வாரத்தைத் தொட்டது

- மருத்துவமனை தாக்குதலை மறுத்தது ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து நேற்று மூன்றாவது வாரத்தை தொட்ட நிலையில் அதன் இலக்கு இன்னும் எட்டுப்படாத சூழலில் இந்தப் போரினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையில் உள்ள நகரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். உக்ரைன் மீது தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது.

மரியுபோல் நகரில் இருக்கும் சிறுவர் மருத்துவமனை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா ‘இனப்படுகொலையில்’ ஈடுபட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டுகிறது. எனினும் இந்த செய்தி போலியானது என்று மறுத்துள்ள ரஷ்யா, அந்தக் கட்டடம் முன்னாள் மகப்பேறு மருத்துவமனை என்றும் அதனை உக்ரைன் படை நீண்டகாலமாக பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனிய இராணுவத்தை நசுக்குவது மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கியின் மேற்குல ஆதரவு அரசாங்கத்தை வெளியேற்றுவதை இலக்காகக் கொண்டே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. எனினும் போலந்து மற்றும் ருமெனிய எல்லைகள் வழியாக வரும் மேற்குலக நாடுகளின் இராணுவ உதவியுடன் உக்ரைன் அரசு ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து தாக்குப்பிடித்து வருகிறது.

தலைநகர் கியேவின் வடமேற்கில் உள்ள மிகப்பெரிய ரஷ்யப் படை ஒரு வாரத்திற்கு மேல் நிலைகொண்டிருக்கும் சூழலில் அது சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தப் படை பெரும் உயிர்ச் சேதத்தை சந்தித்து வருவதாகவும் அந்த இழப்புகளுக்கு மாற்றாக முழு படையையும் பயன்படுத்தும் நெருக்கடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தள்ளப்பட்டிருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் தமது படைகள் திட்டமிட்டபடி உக்ரைனில் முன்னேற்றம் கண்டு வருவதாக புட்டின் குறிப்பிட்டுள்ளார். இந்த படையெடுப்பை “சிறப்புப் படை நடவடிக்கை” என்று அறிவித்திருக்கும் ரஷ்யா, அண்டை நாட்டில் ஆயுதக்களைவு மற்றும் ‘நியோ நாஜி’ என்று அழைக்கும் தலைவர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யப் பொருளாதாரத்தை துண்டிக்கும் வகையில் மேற்குலக நாடுகள் தொடர்ந்து தடைகளை விதித்து வருவதோடு இதனால் ரஷ்ய பங்குச்சந்தை மற்றும் அந்நாட்டு நாணயமான ருபிள் வீழ்ச்சி கண்டு வருகிறது.

“மருத்துவமனை

குண்டுவீச்சு”

ரஷ்ய விமானங்கள் கடந்த புதன்கிழமை சிறுவர் மருத்துவமனை ஒன்றின் மீது குண்டு வீசியதாக ரஷ்ய அதிகாரிகள் கூறிய நிலையில், ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மரியுபோலில் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் நோயாளிகள் இடிபாடுகளின் கீழ் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது.

“மருத்துவமனைகள், மகப்பேறுகள் மீது பயப்பட்டு அவைகளை அழிக்கும் ரஷ்ய கூட்டமைப்பு என்பது எந்த வகையான ஒரு நாடு என்று புரியவில்லை” என்று செலென்ஸ்கி கடந்த புதன்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

இந்த தாக்குதலால் பிரசவ வார்டில் இருந்த பெண்கள் காயமடைந்திருப்பதாகவும் சிறுவர்கள் இடிபாடுகளில் சிக்கி இரப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யா ஆரம்பத்தில் சந்தித்துள்ள பின்னடைவுகளால் அந்த நாடு தாக்குதல்களை தீவிரப்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டிருக்கும் அமெரிக்கா, “அப்பாவி பொதுமக்கள் இலக்குகள் மீது இராணுவத்தை பயன்டுத்துவது காட்டுமிராண்டித்தனமானது” என்று குறிப்பிட்டது.

தாக்குதல் குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களில் மருத்துவமனைக் கட்டடம் சேதமடைந்திருப்பதும், அதன் வெளிப்புறம் பெரிய குழி ஏற்பட்டிருப்பதும் தென்படுகிறது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் “இப்படித் தான் போலிச் செய்திகள் பிறக்கின்றன” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் முதல் பிரதி வதிவிடப் பிரதிநிதி ட்மிட்ரி பொலியன்ஸ்கிவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா முன்னதாக முற்றுகையில் உள்ள மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற உதவியாக போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்தது. இந்த நகரில் நீர் மற்றும் மின்சாரம் இன்றி மக்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக சிக்கியுள்ளனர். இந்த வெளியேற்ற நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன.

Fri, 03/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை