உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் உக்கிரம்: தலைநகரை நோக்கி பாரிய அணிவகுப்பு

அமைதிப் பேச்சில் முடிவில்லை

 

ரஷ்ய ரொக்கெட் தாக்குதல் ஒன்றில் 70க்கும் அதிகமான உக்ரைன் படை வீரர்கள் கொல்லப்பட்டதோடு “காட்டுமிராண்டித்தனமான” செல் வீச்சுகளில் பல டஜன் பொதுமக்கள் காயமடைந்திருப்பதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கியேவை நோக்கி ரஷ்யாவின் பாரிய இராணுவ வாகனத் தொடரணி ஒன்று அணிவகுத்து வரும் நிலையில் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்று மற்றொரு நாட்டின் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலான ரஷ்யாவின் இந்தப் படையெடுப்புக்கு எதிராக உக்ரைன் கடுமையாக போராடி வரும் நிலையில் ரஷ்யா முன்கூட்டி முன்னேற்றம் காண்பது தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கியேவை நோக்கி முன்​னேறும் முயற்சியாக கவச வாகனங்கள், டாங்கிகள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்களைக் கொண்ட ரஷ்யாவின் அணிவகுப்பு ஒன்று பற்றிய செய்மதிப் படங்கள் வெளியாகியுள்ளன.

“கடந்த 24 மணி நேரத்தில் கியேவ் நகரை நோக்கிய ரஷ்யாவின் முன்னேற்றம் மிக மந்தமாகவே இருந்துள்ளது. இதனால் அது தொடர்ந்து ஏற்பட்டியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது பீரங்கி தாக்குதல்களை அதிகரித்திருப்பதாகவும் அது கூறியுள்ளது.

“சன நெரிசல் மிக்க நகர் புறங்கள் மீது கடுமையான பீரங்கி தாக்குதல்களை நடத்தும் நிலையில் பொதுமக்களிடையே உயிர்ச்சேதம் ஏற்படும் அச்சம் அகரித்துள்ளது” என்று அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யப் படைகள் பல முனைகளில் இருந்து தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் மீது கடுமையான குண்டு வீச்சு இடம்பெறும் நிலையில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

“அமைதியான நகரங்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக ரொக்கெட் தாக்குதல்கள், ஆயுதம் ஏந்திய உக்ரைனியர்களுடன் தொடர்ந்தும் சண்டையிடவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெனிகோவ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்கிவ் மற்றும் கியேவுக்கு இடையே இருக்கும் ஒக்டிர்கா நகரில் உள்ள முகாமின் மீது ரஷ்யா நடத்திய செல் தாக்குதலில் சுமார் 70 உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா தரப்பில் இதுவரை 5,710 வீரர்கள் கொல்லப்பட்டு 29 விமானங்கள் அழிக்கப்பட்டு 198 டாங்கிகள் சேதமாக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் கூறியபோதும் அது சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஒன்று எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசுவதில் இணக்கம் எட்டப்பட்டபோதும் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி கூறப்படவில்லை.

மேற்குலக நாடுகளின் தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய நாணயமாக ருபிள் 30 வீதம் சரிவை சந்தித்திருக்கும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்தத் தடைகளின் தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ரஷ்ய மத்திய வங்கி மீது தடைகளை விதித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் அளிப்பது பற்றி வாக்குறுதி அளித்தபோதும், தலைநகர் கியேவ் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

“எதிரிகளின் முக்கிய இலக்காக கியேவ் உள்ளது” என்று செலென்ஸ்கி கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார். தலைநகரில் பாதுகாப்பு அரணை அவர்கள் முறியடிக்க நாம் விடமாட்டோம். எம்மீது அவர்கள் நாசக்காரர்களை அனுப்பியுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் நாம் செயலிழக்கச் செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

கியேவ் நகரில் 3 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் அனல் மின் நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய கொத்து குண்டுகள் மற்றும் வெற்றிட குண்டுகளை பயன்படுத்துவதாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான உக்ரைன் தூதுவர் குற்றம்சாட்டியுள்ளார். அந்த ஆயுதங்களை பயன்படுத்தியது பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மோதல்கள் காரணமாக ரஷ்யாவில் இருந்து இதுவரை 500,000க்கும் அதிகமானவர்கள் வெளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய எல்லையை கடப்பதற்கு காத்திருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

எண்ணெய் நிறுவனங்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற ஆரம்பித்திருப்பதோடு விளையாட்டு மற்றும் கலாசார துறைகளிலும் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் திரைப்படங்களை ரஷ்யாவில் திரையிடுவதை சோனி, டிஸ்னி மற்றும் வோர்னர் பிரோஸ் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. சர்வதேச கால்பந்து சம்மேளனம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு ரஷ்ய அணிகள் மற்றும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்துள்ளன.

Wed, 03/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை