உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு ஒரு மாதம்: போர் முடிவின்றி நீடிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஒரு மாதத்தை தொட்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதோடு பல நகரங்களும் பேரழிவுகளை சந்தித்துள்ளன. எனினும் உக்ரைனின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்ய படைகள் ஸ்தம்பித்திருக்கும் சூழுலில் இந்தப் போர் முடிவதற்கான எந்த சமிக்ஞையும் இன்றி நீடித்து வருகிறது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுப்புக்கு உத்தரவிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய தாக்குதலாக மாறி இருக்கும் இந்தப் போர் மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் ஓர் அணு ஆயுதப் போராக மாறும் அச்சம் எற்பட்டுள்ளது.

இந்தப் போரின் முதல் வாரத்தில் ரஷ்யப் படை வேகமாக தாக்குதலை நடத்தியபோதும் அதனால் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றுவது இதுவரையில் முடியாமல் போயுள்ளது. இதனால் நகரங்களை முற்றுகையில் வைத்திருக்கும் ரஷ்யா அங்கு வான், ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களை இடைவிடாது நடத்தி வருகிறது.

இதன்போது மருத்துவமனைகள், தேவாலயங்கள் மற்றும் வீடுகள் என பொதுமக்கள் இலக்குகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை போர் குற்றவாளி என்று அழைப்பதற்கு காரணமாகியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கியேவ் மீது ரஷ்யப் படை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியபோதும் அந்த நகரை சுற்றிவளைப்பதில் தோல்வியை சந்தித்து வருகிறது.

இதில் முற்றுகையில் இருக்கும் தெற்கு நகரான மரியுபோல் மோசமான தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. நகர் மீது பல வாரங்களாக இடம்பெற்று வரும் குண்டு மழையால் குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டு நகரின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த நகரில் குடிநீர், மின்சாரம் இன்றி சுமார் 100,000 பேர் தொடர்ந்து சிக்கித் தவிக்கின்றனர். அங்கு உணவு விநியோகங்களும் தீர்ந்து வருகின்றன.

இதுவரை ஒரே ஒரு பிரதான நகராக கெர்சோன் மாத்திரமே ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளது.

இந்தப் போரின் உயிர்ச் சேதம் உறுதி செய்யப்படாதுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் அடையாளமாக மாறி இருக்கும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, 121 உக்ரைனிய சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக கடந்த புதன்கிழமை கூறினார்.

14,000 ரஷ்யப் படைகளை கொன்றதாகவும், நூற்றுக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் விமானங்களை அழித்ததாகவும் உக்ரைன் கூறியபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் மதிப்பீட்டின் படி குறைந்தது 7000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 3.6 மில்லியன் உக்ரைனியர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு மேலும் 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போர் சர்வதேச பொருளாதாரம் மற்றும் பூகோள அரசியல் ஒழுங்கை குழப்பி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்து நேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி செலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தனது சமீபத்திய காணொளியில் அவர் வழக்கத்துக்கு மாறாக உக்ரைன் மொழியில் அல்லாது ஆங்கிலத்தில் பேசினார். ரஷ்யாவின் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் சுதந்திரம் தொடர்புடையது அது – ரஷ்யாவின் மசகு எண்ணெய் வளத்தை பயன்படுத்துவதை உலகம் நிறுத்த வேண்டும் என்றும் செலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

“உங்கள் அலுவலகங்கள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து வீதிகளுக்கு வாருங்கள், அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரிக்கவும், சுதந்திரத்தை ஆதரிக்கவும், எங்களுடைய வாழ்க்கையை ஆதரிக்கவும் வாருங்கள்” என்று செலென்ஸ்கி அந்த காணொளியில் அழைப்பு விடுத்தார்.

Fri, 03/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை