மனித உரிமைகள் பேரவையில் உண்மைகளை முன்வைத்து விளக்கம்

செப்டெம்பர் அமர்வையும் எதிர்கொள்ள தயார்

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக, உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்திய அதேவேளை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதே தமது பிரதான வாதமாக இருந்தது என பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

இதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைப் பிரதிநிதிகள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 50 ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அடுத்த சவாலாக இருக்கும் என்றும், அதனை சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் ஆதரவுடன் எதிர்கொள்வோம் என்றும் அவர் கூறினார்

சுவிட்சலாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடருக்கு இலங்கை வெற்றிகரமாக முகங்கொடுத்ததாகவும், குற்றச்சாட்டுக்களுக்கு தர்க்க ரீதியாக விடயங்களை முன்வைத்து, அவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள முடிந்ததாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஜெனீவாவில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும், அவை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 50ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த சவாலாகும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இதற்கு முறையான கால அட்டவணையுடன் கூடிய உரிய திட்டமிடல்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும், அதற்காக சிவில் சமூகம், புத்திஜீவிகள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் போராட்டங்கள் நடத்துவது LTTE கருத்துடையோர் மற்றும் அதற்கு துணை போவோர் அடங்கிய மிகச் சிறிய குழுவினாலேயே முன்னெடுக்கப்படுகிறது. அவற்றினால் இலங்கைக்கு பெரிய தாக்கம் ஏற்படப் போவதில்லை. எவ்வாறாயினும் அவர்களையும் நாட்டின் அபிவிருத்தியில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் முன்னேற்றத்தை அடைந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Thu, 03/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை