பாராளுமன்றில் பெரும்பான்மை இழந்தது இம்ரான் கானின் அரசு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவரது ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சி ஒன்று அதரவை வெளியிட்ட நிலையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

ஆளும் கூட்டணியில் இருக்கும் எம்.கியூ.எம்–பீ கட்சி கூட்டு எதிர்க்கட்சியுடன் கடந்த செவ்வாய் இரவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதனால் இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் தலைமையிலான அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி பாராளுமன்ற கீழ் சபையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு 177 இடங்கள் உள்ளன. இதனால் ஆளும் கட்சி அதிருப்தியாளர்களின் ஆதரவை திரட்ட வேண்டிய தேவை இருக்காது. மறுபுறம் ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 164 உறுப்பினர்களே உள்ளனர்.

பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. பாராளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.

கடந்த மார்ச் 28 அன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகிறது.

வெளிநாட்டுப் பணத்தின் உதவியோடு தமது அரசை சிலர் கவிழ்க்க முயற்சிப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டுகிறார். தனது கோரிக்கையை ஆதரிக்கும்படி பாகிஸ்தான் தலைமை நீதி அரசருக்கு கடிதம் ஒன்றை எழுத இம்ரான் கான் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அசாத் உமர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/31/2022 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை