கல்வி அமைச்சுக்குத் தேவையான கடதாசி தொகை அரசிடமிருந்து

பரீட்சைகள் எதுவும் தடங்கலின்றி நடைபெறும்

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சுக்கு தேவையான கடதாசி தொகையை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கல்வியமைச்சின் உயரதிகாரி   ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பாடசாலை புத்தகங்கள் உட்பட அனைத்து அச்சுப் பதிப்பு நடவடிக்கைகளுக்கான கடதாசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கடதாசி தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 9, 10, 11 வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஒத்திப் போடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

பரீட்சைக்கான வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி தட்டுப்பாடு மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் கட்டுப்பாடு நிலவிய காரணத்தினாலேயே அந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் மேற்படி வகுப்புகளுக்கான பரீட்சைகளை தாமதமின்றி இம்மாதம் 29ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று சப்ரகமுவ மாகாணத்திலும் வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை 6,7,8ஆம் வகுப்புகளுக்கான முதலாம் தவணைப் பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை