வான் தடை வலயம்: ஐரோப்பாவுக்கு விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை

உக்ரைனில் “வான் தடை வலயம்” ஒன்றை அமைக்கும் முயற்சிக்கு எதிராக மேற்குலக சக்திகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடுமையாக எச்சரித்துள்ளார். அவ்வாறான முயற்சி ரஷ்யா மற்றும் உக்ரைன் படைகளுக்கு எதிரான இராணுவ மோதலில் மற்றொரு நாடு ஈடுபடுவதாக கருதப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
“இவ்வாறு எந்த நாடேனும் செயற்பட்டால் அந்த நாடு ஆயுத மோதலில் பங்கேற்பதாக நாம் கருதுவோம்” என்று மொஸ்கோவுக்கு வெளியில் எரோபிளோட் ஊழியர்களுடன் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது புட்டின் கூறினார்.
 
“வான் தடை வலயம் ஒன்றை செயற்படுத்துவது ஐரோப்பாவுக்கு மாத்திரமல்ல முழு உலகுக்கும் மகத்தான மற்றும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
வான் தடை வலயம் ஒன்று இல்லாதது உக்ரைன் நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து குண்டு வீசுவதற்கு பச்சைக் கொடி காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
எனினும் உக்ரைனில் அனுமதி இல்லாத அனைத்து விமானங்களையும் தடுக்கும் வான் தடை வலயத்தை நிறுவுவது, அணு ஆயுத நாடான ரஷ்யாவுடன் ஐரோப்பாவில் பரந்த போர் ஒன்றை தூண்டிவிடும் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
Mon, 03/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை