அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கில் மீளவும் ஆரம்பம்

- யாழ்ப்பாணத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

வடக்கிற்கான இருநாள் விஜயத்தை மேற்கொண்டு யாழ். மட்டுவிலில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைத்த பின் உரை

நான் உங்களை மறக்க மாட்டோம் கைவிடவும் மாட்டோம் எனவும் பிரதமர் தமிழில் தெரிவிப்பு

வட மாகாணத்தில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் ஆரம்பிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்ட அவர், நாம் உங்களை மறக்கமாட்டோம், கைவிடமாட்டோம் என தமிழில் தெரிவித்தார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நேற்று யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்தார். இங்கு உரையாற்றிய பிரதமர், அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம். யுத்தத்திற்கு முடிவு கட்டி மீண்டும் அந்த நிலையை உருவாக்க அடித்தளமிட்டதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் சந்தோஷம் என தமிழில் உரையாற்றிய பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

அவசரகாலச் சட்டங்களை நீக்கி நாம் ஏற்படுத்திய மாகாண சபை நல்லாட்சியுடன் கலைக்கப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஒரு வீதி அபிவிருத்தியோ அல்லது மின்சார திட்டமோ யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கவில்லை. நாட்டிற்கும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தால் யாழ்ப்பாண மக்கள் இன்று இருளில் மூழ்கியிருக்க மாட்டார்கள் என்று தெரிவித்த பிரதமர், ஆனால் அந்த நல்லிணக்கத் திட்டத்திற்காக பில்லியன்கள் செலவிடப்பட்டன என்றார்.

சமாதானம் பற்றிய பாடலுக்கு பில்லியன்கள் செலவழிக்கப்பட்டன. ஆனால் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு குடிநீர் குழாய் வழங்கப்படவில்லை.

நாங்கள் செய்து கொண்டிருந்த பணி 2015ல் நிறுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாட்டைக் கைப்பற்றிய போது, நல்லாட்சியின் மூலம் பின்னோக்கிச் சென்ற நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன். 1970களில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது யாழ் மக்களுக்கும் கொழும்பு மக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் சிங்கள முதலாளிமார் இருந்தார்கள்.

இங்கிருந்த பெரும்பாலான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது கொழும்பில் இருந்தனர். இன்றும் அப்படித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து ரயிலிலே கொழும்பு வந்துசென்றனர்.

கொழும்பில் பணிபுரியும் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமை மாலை ரயிலில் ஏறி காலையில் யாழ்ப்பாணத்தை சென்றடைவர். அது ஒரு காலம். அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் எங்களுக்கு வெகு தொலைவில் இல்லை. மிக நெருக்கமாக உணர்ந்தோம்.

அந்த சகாப்தம் 1980க்குப் பின்னர் திடீரென மறைந்தது. யாழ்ப்பாணம் செல்லும் ரயில் பாதையை உடைத்தனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் செல்ல வேண்டிய யாழ்தேவி நின்றது. வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாக யாழ்தேவியைப் பார்க்கிறேன்.

வடக்கு மக்கள் சுதந்திரத்தை இழக்க ஆரம்பித்தனர். வடக்கில் விவசாயி நெல் வயலுக்குச் செல்ல முடியவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. வடக்கு பதுங்கு குழியாக மாறியது.

சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் உரிமையை இழந்தனர். எந்த நேரத்திலும் தமது சொந்த வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.

Mon, 03/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை