திரவப் பால் கோரி எம்பிக்கள் தகராறு செய்தார்களா?

- பத்திரிகை செய்தி தொடர்பில் விசாரணைக்கு சபாநாயகர் பணிப்பு

திரவப்பால் தருமாறு கேட்டு எம்.பிக்கள் சிலர் பாராளுமன்ற உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதாக செய்தி வெயிடப்பட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்டுத்தி எம்.பிக்களின் கெளரவத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிடப்படுவது கவலையளிக்கிறது என தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதுதொடர்பாக எடுக்கக் கூடிய நடவடிக்கை தொடர்பில் சபைக்கு அறிவிக்க இருப்பதாக நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தார். பாராளுமன்ற உணவகத்தில் திரவப்பால் கேட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் ஏற்படுத்தியதாக தேசிய பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வினவிய போது அவ்வாறான எந்த சம்பவமும் இடம்பெறவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான செய்திகள் மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களதும் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் இது தொடர்பாக விசாரணை செய்து, அந்த பத்திரிகை ஆசிரியரை அழைத்து இதுதொடர்பாக விளக்கம் கோர வேண்டும். உணவகத்துக்கு சென்று சாப்பிடவேண்டிய தேவை எமக்கில்லை. அதனால் உணவகத்தை மூடிவிடுமாறு உத்திரவிட்டால் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் என்றார்.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கருத்து வெளியிட்டதோடு, பாராளுமன்றத்தின் ஒருநாள் செலவு எவ்வளவு என்று மக்களுக்கு தெரியும். நாட்டில் சாதாரண மக்களுக்கு இன்று சமையல் எரிவாயு இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அந்த அழுத்தத்தினாலே மக்களிடமிருந்து இவ்வாறான கேள்விகள் எழுகின்றன. எனவே மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் கஷ்டப்படும்போது நாங்கள் மாத்திரம் சொகுசாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இவ்வாறான பிழையான செய்திகள் இதற்கு முன்னரும் பிரசுரமாகியுள்ளது. அதுதொடர்பில் கவலையடைகின்றோம். ஊடகங்களுக்கு இருக்கும் செய்தி வெளியிடும் உரிமையை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கவலையடைகின்றோம்.

பாராளுமன்ற உணவகத்தில் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை கோர உள்ளேன், அதனை சிறப்புரிமை குழுவுக்கு சமர்பித்து மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை தொடர்பில் சபைக்கு அறிவிப்பேன் என்றார்.

லோரன்ஸ் ​செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 03/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை