மக்கள் சேவைக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்

செல்லச்சாமி, தங்கேஸ்வரி குறித்து பிரதமர் அனுதாப உரை

மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.எஸ் செல்லச்சாமி போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் தபால்துறை பிரதியமைச்சராகவும் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றியவ​ரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிராமன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது பெண் பிரதிநிதி என்ற பெருமைக்குரியவர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெற்றி வீரக்கோன், எம்.எஸ் செல்லச்சாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் க.தங்கேஸ்வரி ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை நடைபெற்றது. இந்த பிரேரணையில் உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக எம்.எஸ். செல்லச்சாமி 1989 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

1963 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்த தொழிற்சங்கள் பலவற்றில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். அதன் போது மலையக மக்களுக்கு அளப்பரிய சேவைகளை செய்தவர் அவர்.

அவர் கொழும்பில் செனட் உறுப்பினராகவும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் நிறைவேற்று உறுப்பினராகவும் சேவையாற்றிய சிரேஷ்ட அரசியல்வாதியாவார்.

அதேபோன்று 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவானவர் தங்கேஸ்வரி கதிராமன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை அவருக்குரியது. களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர் கலாசார உத்தியோகத்தராகவும் எழுத்தாளராகவும் சேவை செய்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த அவர் சமய கலாசாரத் துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்.

மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்திய அவர், 2011 ஆம் ஆண்டு மண்முனை பிரதேசத்தில் புதிய கல்வி வலயம் உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Sat, 03/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை