மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை அரசு கூடுதலான ஈடுபாடு

அண்மைக்காலத்தில் உணர முடிவதாக மிச்செல் பச்லெட் தெரிவிப்பு

மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை இனங்கண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் கூடுதலாக ஈடுபடுவதை அண்மைக்காலத்தில் காணமுடிந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலமை தொடர்பில் விரைவில் தீர்மானிக்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தேவையான இழப்பீடுகளை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில ஏற்பாடுகளைத் திருத்தியமைப்பதற்கும் அந்தச் சட்டத்தின் கீழ் பல கைதிகளை விடுதலை செய்வதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்டாமல் தவிர்ப்பதற்குத் தேவையான ஆழமான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும். எனினும், கடந்த வருடம் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் தொடர்ந்தும் பின்னடைவைக் காண முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரினதும் மனித உரிமைகளுக்காக அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பத் தகுந்த வழிவகைகளை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடு அதேபோல் தாக்குதல்களின் தன்மை, பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு என்பன பற்றிய விரிவான அறிக்கையொன்றை அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

Mon, 03/07/2022 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை