சர்வகட்சி மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்ற விசேட குழு நியமனம்

அனைத்து விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படும் − ஜனாதிபதி

தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் உறுதி எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வ கட்சி மாநாட்டில் கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து யோசனைகளையும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்றும் அந்த யோசனைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி  நிலைக்கு அனைவருமே பொறுப்பு என்பதால் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதிலும் அனைவருக்கும் பொறுப்புள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்தும் இத்தகைய கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி.

சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் யோசனைகளையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.

அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம். இத்தகைய மாநாட்டை தொடர்ந்தும் நடத்துவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் நான் அழைப்பு விடுப்பேன்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறுவதுடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாத கட்சிகளுக்கு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.

அதேபோன்று மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஆராயும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் குழு ஒன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சித் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் கொள்வதுடன் தொடர்ந்தும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இது அரசியலுக்காக மேற்கொள்ளப்படுவதல்ல.

தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவருக்கும் பொறுப்புள்ளதென நான் நம்புகின்றேன்.

சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து நாட்டின் முன்னேற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்களிப்பை வழங்க முடியும்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு நாம் அனைவருமே பொறுப்பு என்பதால் தீர்வு பெற்றுக் கொள்வதிலும் அனைவருக்கும் பொறுப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை