ரஷ்யா மீது தடைகள் அதிகரிப்பு: போர் களத்திலும் முட்டுக்கட்டை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நேற்று ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன. உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யப் படை ஸ்தம்பித்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்டபோதும் போரினால் பேரழிவுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி படையெடுப்பை ஆரம்பித்த ரஷ்ய துருப்புகள் தடுமாற்றம் கண்டிருப்பதாக மேற்கத்திய தரப்புகள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனில் விரைவான ஒரு வெற்றி மற்றும் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கியின் அரசை வீழ்த்தும் திட்டத்தில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருகிறது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும், உக்ரைன் படையினரின் இடைவிடாத எதிர்தாக்குதல் காரணமாகவும், ரஷ்யப் படைகளின் தாக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தங்கள் தாக்குதலை தொடர்வதில் ரஷ்யப் படைகள் போராடிவருவதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அண்மைய உளவுத்துறை மதிப்பீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இராணுவ தளவாட பிரச்சினைகள் தொடர்வதால், உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யப் படைகள் முன்னேற முடியாமல் தள்ளாடிவருகிறது,’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யப் படையினரின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம் மற்றும் வான்படை பற்றாக்குறை காரணமாக, அப்படையினருக்கு ‘அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் எரிபொருள்’ உள்ளிட்டவற்றை விநியோகிக்க இயலவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது. ‘இடைவிடாத உக்ரைனிய எதிர்த் தாக்குதல் காரணமாக, தங்களின் விநியோகச் சங்கிலியை காப்பதற்காக அதிகளவிலான ரஷ்யப்படைகளை திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், ‘உக்ரைன் முழுதும் ரஷ்யப்படைகள் முடக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டிருந்ததை பிரதிபலிக்கிறது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் எந்த ஷெல் தாக்குதலும் பதிவாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.

போர்க் களத்திலான பின்னடைவுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தமது நிலைப்பாட்டில் இருந்து இறங்குவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி சிறிய சமிக்ஞை ஒன்றையே வெளியிட்டுள்ளார்.

தமது பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கத்தை தாங்கிக்கொள்ள சீனா உதவும் என்று புட்டின் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் புதிய இராணுவ உதவி பற்றி அமெரிக்க அறிவித்திருப்பதோடு ரஷ்யாவுக்கு சீனா நேரடி இராணுவ உதவிகள் அளிப்பது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சீனா ரஷ்யாவுக்கு உதவுவது பற்றிய கவலைக்கு மத்தியிலேயே இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் ரஷ்யாவின் செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிடுவதற்கு அல்லது அதனை ஒரு ஆக்கிரமிப்பாக அறிவிப்பதற்கு சீனா மறுத்து வருகிறது. உக்ரைனின் இறைமையை மதிப்பதாக குறிப்பிடும் சீனா, ரஷ்யா தனது பாதுகாப்பு கவலைகள் பற்றி நடவடிக்கை எடுக்க உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளது.

சீனாவுக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்திருக்கும் சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ரஷ்யாவின் தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தனித்தனியே தடைகளை அறிவித்துள்ளன. இதில் அவுஸ்திரேலியாவின் சுரங்கத் தொழில்துறையுடன் தொடர்புடைய இரு செல்வந்தர்களுடன் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஆயுத ஏற்றுமதி, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியும் இந்த தடையில் உள்ளடங்குகின்றன.

உக்ரைனில் இதுவரை 2,032 பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் 780 பேர் கொல்லப்பட்டு 1,252 பேர் காயமடைந்திருப்பதாகவும் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 3.2 மில்லியன் பேர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஹங்கேரி, சுலோவாக்கியா, ருமேனியா, மோல்டோவா ஆகிய அண்டை நாடுகளில் பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். போலந்தில் மிக அதிகமாக ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்டோர் எல்லையைக் கடக்கின்றனர்.

உக்ரைனிலிருந்து சில அகதிகள் ஜெர்மனி, செக் குடியரசு என மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். உக்ரைன் பூசலிலிருந்து உக்ரேனியர்கள் வெளியேறுவதற்கு அவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரிய அளவில் அகதிகள் வந்தால் சவாலாக இருக்கும் என்று அவை ஒப்புக்கொண்டுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. எனினும் உடன்படிக்கை ஒன்று இன்னும் எட்டப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை காப்பாற்ற மீட்பாளர்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் தஞ்சம் பெற்றிருந்த திரையரங்கு ஒன்றின் மீது கடந்த புதன்கிழமை வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது.

திரையரங்கு மீதான தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தப் போரினால் மரியுபோல் நகர் பெரும் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் முற்றுகைக்கு மத்தியில் குடிநீர், மின்சாரம், உணவு இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் நிலவறைகளில் சிக்கி உள்ளனர்.

தலைநகர் கியேவின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு புறநகர் பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இரவு நேர ரொக்கெட் தாக்குதலுக்கு மத்தியில் நகரில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இதற்கிடையே உக்ரைனின் வடக்கில் இருக்கும் ஜெனீவா நகரில் நடந்த தாக்குதலில் 53 பேர் உயிரிழந்ததாக அந்நகரின் ஆளுநர் கூறினார். தலைநகர் கீயேவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் கட்டடம் ஒன்று கடுமையாகச் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஒரு போர்க்குற்றவாளி என்று சாடியுள்ளார். அது ஏற்றுக்கொள்ள முடியாத, மன்னிக்கமுடியாத வெற்றுப்பேச்சு என்று ரஷ்யா கூறியது.

Sat, 03/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை