மரியுபோல் நகரில் ரஷ்யாவின் கெடுவை உக்ரைன் நிராகரிப்பு

உக்ரைனின் முற்றுகையில் இருக்கும் மரியுபோல் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற அங்கிருக்கும் படையினர் சரணடைவதற்கு ரஷ்யா வழங்கிய கெடுவை உக்ரைன் நிராகரித்துள்ளது.

ரஷ்யா வழங்கிய முன்மொழிவில், நகரில் இருக்கும் படையினர் ஆயுதங்களை கீழே வைத்தால் பொதுமக்கள் வெளியேற அனுமதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அதனை நிராகரித்திருக்கும் உக்ரைன், மூலோபாயம் மிக்க இந்தத் துறைமுக நகரில் இருந்து சரணடைவதற்கான பேச்சே இல்லை என்று உக்ரைன் கூறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தீர்ந்து உதவிகள் நுழைவது தடுக்கப்பட்ட நிலையில் மரியுபோல் நகரில் சுமார் 300,000 மக்கள் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

மின்சாரம் இன்றியும் குடிநீர் வசதிகள் தீர்ந்து வரும் நிலையிலும் கடந்த சில வாரங்களால் குடியிருப்பாளர்கள் ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கெடுவை விதித்தது. மொஸ்கோ நேரப்படி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை இதனை ஏற்பதற்கு உக்ரைனுக்கு அவகாசம் இருப்பதாக ஜெனரல் மிகைல் மிசின்சேவ் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ரஷ்யா மரியுபோலில் மனிதாபிமான பாதைகளை திறக்கும். நகரில் இருக்கும் உக்ரைனிய துருப்புகள் மற்றும் வெளிநாட்டு கூலிப்படையினர் ஆயுதத்தை கீழே வைத்து நகரை விட்டு வெளியேற வேண்டும்.

வீதிகளில் உள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின், உணவு, மருந்து மற்றும் ஏனைய விநியோகங்களுடனான மனிதாபிமான வாகனத் தொடரணி நகருக்கு பாதுகாப்பாக நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று ரஷ்ய இராணுவம் பின்னர் குறிப்பிட்டது.

நகரில் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருப்பதை ரஷ்ய ஜெனரல் மிசின்சேவ் ஒப்புக்கொண்டார். கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் இந்தத் திட்டத்தை நிராகரித்த உக்ரைன் பிரதிப் பிரதமர் இரினா வெரெஷுக், மரியுபோலை காப்பதை உக்ரைன் கைவிடாது என்றார். “சரணடைவது மற்றும் அயுதங்களை கிழே வைப்பது பற்றிய பேச்சுக்கு இடமில்லை” என்று அவர் உறுதியாக குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் மூலோபாயம் கொண்ட இலக்காக மரியுபோல் உள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பித்தது தொடக்கம் இந்த நகரில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

ரஷ்ய இராணுவம் இந்த நகரை கடந்த சில வாரங்களாக சுற்றிவளைத்துள்ளது. இதனால் நகருக்குள் சிக்கி இருக்கும் குடிமக்கள் மின்சாரம், நீர் அல்லது எரி வாயுவின்றி தவித்து வருகின்றனர்.

நகரில் இருக்கும் 90 வீதமான கட்டடங்கள் சேதமாக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு குறைந்தது 2,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நகர நிர்வாகம் கூறியபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

ரஷ்யப் படைகள் அந்நகரத்தில் தரைவழி, வான்வழி, கடல்வழி என மூன்று வழிகளிலும் இடைவிடாத தாக்குதலை தொடர்ந்து வருவதால், மக்கள் பெரும்பாலான நேரத்தை பதுங்கு குழிகளிலேயே கழிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நகரம் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன. அந்நகர மேயர் வாடிம் போய்ஷென்கோ, 80 வீத குடியிருப்பு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன எனவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு பழுதுபார்க்க முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

உக்ைரனின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. தலைநகர் கியேவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், வீடுகள் மற்றும் கடைத் தொகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

உக்ைரனின் வட-கிழக்கு பகுதியிலிருந்து தலைநகரை நோக்கி முன்னேறும் ரஷ்யப்படைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படையினரின் பெரும்பகுதி கியேவிலிருந்து 15 மைல்கள் (24 கி.மீ) தொலைவில் இருப்பதாகவும், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ைரனின் வட-கிழக்கு நகரமான சுமியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில், அமோனியா கசிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நகரமும் ரஷ்யப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த வாயு ஆபத்தானது என்பதால், அந்த தொழிற்சாலையின் மூன்று மைல்கள் தொலைவில் உள்ள மக்கள், அங்கிருந்து வெளியேற வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tue, 03/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை