எல்லேவல நீர்வீழ்ச்சி பிரதேசத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

வெல்லவாய பிரதேசசபைத் தலைவர் அறிவிப்பு

வெல்லவாய பகுதியின் எல்லேவல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கும் அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உல்லாச பிரயாணிகளுக்கு முற்று முழுதாக தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வெல்லவாய பிரதேசசபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.  

நேற்று முன்தினம் எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்ற அக்கரைப்பற்று பிரதேசத்ததை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்ததை தொடர்ந்து இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  

இவ் அறிவித்தல் தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர், 'எல்லவெல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு எமது பிரதேசசபையினால் பாதுகாப்பு கம்பிவேலி போடப்பட்டு, எச்சரிக்கைப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்பிரதேசத்துக்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவ்வேலியை உடைத்துத்தள்ளியும் எச்சரிக்கை பதாகையை அகற்றியுமுள்ளனர். 

இதுவரையில் இந்நீர்வீழ்ச்சியில் 13பேர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர். கடந்த இருவாரங்களுக்கு முன் தகப்பனும் இருபிள்ளைகளும் நீரில் மூழ்கி பலியாகினர். ஒருமாதத்திற்கு முன்னரும் மூவர் நீரில் மூழ்கி மரணமாகினர். கடந்த ஒருவருடத்திற்குள்ளேயே உல்லாச பிரயாணிகளாக வந்தவர்களில் 13பேர் இவ்வாறு நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.  

இந்நீர்வீழ்ச்சிப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எமது பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உறுதியான பாதுகாப்பு மதில், நீர்வீழ்ச்சியில் குளிக்க முடியாத வகையில் சுற்றுவளைவுகள், உறுதியான எச்சரிக்கை காட்சிப்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ளவுள்ளோம். அவ்வேலைத் திட்டம் நிறைவுபெறும்வரை இந்நீர்வீழ்ச்சிப்பிரதேசம் முற்று முழுதாக தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாற்றியுள்ளோம் என்றார்.

பதுளை தினகரன் விசேடநிருபர்  

    

Thu, 03/03/2022 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை