அமைதிப் பேச்சுக்கு மத்தியிலும் உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல்

தலைநகரை நெருங்குகிறது ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் இரு தரப்புக்கும் இடையே மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று இடம்பற்றது.

ரஷ்யப் படையினர் உக்ரைன் தலைநகர் கியேவை நெருங்கி இருப்பதோடு முற்றுகையில் உள்ள தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் ரஷ்யா தனது இடைவிடாத குண்டுவீச்சை நேற்றும் தொடர்ந்தது.

இந்நிலையில் இரு தரப்பு பிரதிநிதிகளும் நேற்று திங்கட்கிழமை வீடியோகொன்பிரன்ஸ் வழியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இந்த சிக்கலான போராட்டம் மிக்க பேச்சுவார்த்தையில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான முடிவை எட்டுவதே எமது இலக்கு” என்று இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமர் செலென்ஸ்கி தெரிவித்தார்.

இரு ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாகவும். மக்கள் அதற்காகவே காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இதற்கு முன்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் போர் நிறுத்தம் ஒன்றை கொண்டுவருவதில் தோல்வி அடைந்திருப்பதோடு ரஷ்யா தனது தாக்குதல்களை தணிப்பதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை.

நேட்டோ அங்கத்துவ நாடான போலந்துக்கு அருகாமையில் உக்ரைனின் எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய அபாயகரமான தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டு, மேலும் 130 பேர் காயமடைந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

மேற்கு நகரான ல்விவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை அடுத்து வான் தடை வலயத்தை அமைக்கும்படி நோட்டோவை உக்ரைன் ஜனாதிபதி நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“எமது வானை நீங்கள் மூடாவிட்டால் ரஷ்ய ஏவுகணைகள் உங்களது நிலத்தில் நேட்டோ மக்களின் வீடுகளில் விழுவதில் காலமே போதுமானது” என்று செலென்ஸ் தனது வீடியோ உரை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டணி உக்ரைனுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவதோடு ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத தடைகளை விதித்து வருகிறது. ஆனால் உக்ரைன் போரில் நேரடியாக தலையிடுவதை அமெரிக்கா மற்றும் நேட்டோ நிராகரித்துள்ளது. நோட்டோ, ரஷ்யா உடன் போரிடுவது என்பது மூன்றாம் உலகப் போராக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறி இருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவோல் மக்ரோனுடம் பேசினார். ரஷ்யா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மற்றும் உக்ரைன் அரசு மற்றும் மக்களுக்கு உதவுவதற்கு இரு தலைவர்களும் உறுதி கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

கருங்கடல் முடக்கம்

உக்ரைனை சர்வதேச கடல் வர்த்தகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் கருங்கடற்கரையில் கடற்படை தடுப்பு ஒன்றை ரஷ்யா ஏற்படுத்தி இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட புதிய உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“ரஷ்யக் கடற்படைகள் உக்ரைன் எங்கும் இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியுள்ளது.” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கியேவின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற புதிய மோதல்களில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய படையெடுப்புக்குப் பின் வெளிநாட்டு செய்தியாளர் ஒருவர் கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும்.

இதேவேளை பேரழிவை சந்தித்திருக்கும் தெற்கு நகரான மரியுபோலுக்கு உதவிகளை அளிக்கும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்த நகர் மனிதாபிமான பேரழிவை சந்தித்திருப்பதாக உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நகரை நோக்கி பயணித்த மனிதாபிமான உதவிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திரும்பிச் சென்றுள்ளன. ரஷ்யா தனது தாக்குதல்களை நிறுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இடைவிடாத தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் அந்த நகரில் மொத்தம் 2,187 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நகர சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

“உண்மையான இனப்படுகொலையில் ஈடுபட்டு எதிரிகள் நகரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர்” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் உலெக்சி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா படையெடுப்பின் ஆரம்பத்தில் ரஷ்ய இனத்தினர் அதிகம் வாழும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் அதிக அவதானம் செலுத்திய நிலையில் அண்மைய தினங்களில் மத்திய பகுதியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனின் மேற்கத்திய அண்டைய நாடுகளுக்கு நெருக்கமாக போலந்து எல்லைக்கு அருகில் இருக்கும் இராணுவத் தளத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரஷ்யா தனது இலக்குகளை விரிவுபடுத்தியுள்ளது” என்று பெண்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தலைநகர் கியேவின் தெற்கில் உள்ள வீதிகள் மாத்திரமே திறந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நகர அதிகாரிகள் சோதனைச்சாவடிகளை அமைத்திருப்பதோடு முற்றுகை ஒன்றை எதிர்நோக்கும் அச்சத்தில் மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமித்து வருகின்றனர்.

வடமேற்கு புறநகர் பகுதியான புச்சா மற்றும் இர்பின் நகரின் பகுதிகள் முழுமையாக ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் இராணுவம் ஏ.எப்.பிக்கு தெரிவித்துள்ளது. முன்னர் நன்றாக இருந்த சில புறநகர் பகுதிகள் தற்போது இடிபாடுகளாக மாறியுள்ளன.

“இந்த படுகொலையை நிறுத்துங்கள்”

கியேவில் இருந்து 25 கிலோமீற்றருக்குள் ரஷ்ய படைகள் நிலைகொண்டிருப்பதாகவும் நகரின் வடக்கு பக்கமாக சுற்றிவளைக்கும் முயற்சி ஒன்று சிதறடிக்கப்பட்டதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்று கூறப்பட்டிருந்தது.

எனினும் தலைநகரின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இருபக்கங்ளிலும் உக்ரைன் படையின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“உக்ரைன் படையினர் கடுமையாக எதிர்ப்பை காட்டிவரும் நிலையில் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ரஷ்யா அதிக விலை கொடுத்து வருகிறது” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு தனது உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உக்ரைனில் இருந்து சுமார் 2.7 மில்லியன் பேர் வெளியேறி இருப்பதாக ஐ.நா கணித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் போலந்தில் தஞ்சம் பெற்றுள்ளனர்.

பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவிடம் உணர்வுபூர்வமான கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். “இறைவனின் பெயரால், இந்தப் படுகொலையை நிறுத்துங்கள்” என்று அவர் கேட்டுள்ளார்.

இந்தப் போரில் ரஷ்யா சுமார் 12,000 துருப்புகளை இழந்து கடும் இழப்பை சந்தித்திருப்பதாக செலென்ஸ்கி கூறியபோதும், 498 படையினரே கொல்லப்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டிருந்தது. அது பற்றி ரஷ்யா கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஒரே ஒரு அறிக்கையை மாத்திரமே வெளியிட்டிருந்தது.

சுமார் 1,300 உக்ரைனிய படையினர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தெற்கு உக்ரைன் நகரான கெர்சொனில், ஆயிரக்கணக்கான உள்ளுர் மக்கள் படையெடுப்புக்கு எதிராக ஆர்ப்பட்டம் ஒன்றுக்கு ஒன்று திரண்டதை அடுத்து ரஷ்ய துருப்புகள் அவர்களை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளன.

Tue, 03/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை