ரஷ்ய துருப்புகள் உக்கிர மோதல்: பல நகரங்களிலும் சரமாரி தாக்குதல்

போர் நிலவரம்

ரஷ்யாவின் படை நடவடிக்கை தொடர்பான தற்போதைய நிலை குறித்த மதிப்பீட்டை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இராணுவ ஆய்வாளர்களான போர் ஆய்வுக்கான நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய நிலவரம்:

கியேவ்: ரஷ்யாவின் பிரதான போர் நடவடிக்கை உக்ரைன் தலைநகரிலேயே இடம்பெற்று வருகிறது. நகரின் மேற்கு மற்றும் கிழக்கில் இருந்து முன்னேறும் ரஷ்யா அந்த நகரை சுற்றுவளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நகரின் கிழக்குப் பக்கமாக நகரை நோக்கி 64 கிலோமீற்றர் நீண்ட இராணுவ வாகனத் தொடரணி ஒன்று முன்னேறும் நிலையில் அந்தப் படை நகரை மேற்குப் பக்கமாக தாக்குவதற்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்கிவ்: ஷெல் வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை அல்லது இன்று வியாழக்கிழமை இரண்டாவது மிகப்பெரிய நகரில் தரைவழி தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் ரஷ்யா வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

தெற்கு செர்சோன் நகரை கைப்பறும் முயற்சியில் ரஷ்யப் படை ஈடுபட்டுள்ளது. இது ஒடேசா மற்றும் மைகொலைவ் மீதான புதிய தாக்குதல்களுக்கு வழியை ஏற்படுத்தும் என்பதோடு அது உக்ரைன் துறைமுகத்தை அணுகுவதை தடுப்பதாக அமையும்.

அதேபோன்று கிழக்கில் மரியுபோல் நகரை துருப்புகள் சுற்றிவளைக்கும் முயற்சியில் உள்ளன. இது ரஷ்ய பிரதான நிலம் மற்றும் அது ஏற்கனவே தனது ஆட்புலத்திற்குள் இணைத்துள்ள கிரிமியாவுக்கு இடையே தரைவழி இணைப்பு ஒன்றை ஏற்படுத்துவதாக அமையும்.

 

உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் நகரில் ரஷ்ய படையினர் நேற்று பாராசூட் மூலம் தரையிறங்கிய நிலையில் அங்கு கடும் மோதல் வெடித்திருப்பதாக உக்ரைன் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழுவீச்சில் படையெடுப்பை மேற்கொண்டு ஏழாவது நாளான நேற்று பல நகரங்களில் உக்கிர தாக்குதல்கள் இடம்பெற்றன.

“ரஷ்ய பாராசூட் தூருப்புகள் கார்கிவில் தரையிறங்கின. உள்ளுர் மருத்துவமனை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என்று உக்ரைன் இராணுவம் நேற்று தெரிவித்தது.

“ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உக்ரைனியர்கள் இடையே தற்போது மோதல் இடம்பெற்று வருகிறது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வான் தாக்குதல் ஒன்றை அடுத்து நகரில் விமானக் கல்லூரி ஒன்றின் முகாம்களில் தீ பரவியதாக உக்ரைன் உள்துறை அமைச்சின் ஆலோசகர் அன்டன் கரஸ்சன்கோ தெரிவித்துள்ளார்.

“உண்மையில் கார்கிவில் பீரங்கி குண்டில் இருந்து விடுபடாத ஓர் இடம் இல்லை” என்று டெலிகிராமில் அவர் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அரச கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு மேலும் 24 பேர் காயமடைந்ததாக நகரின் ஆளுநர் ஒலேக் சினகுபொவ் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

1.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கும் கார்கிவ் நகர் பெரும்பான்மை ரஷ்ய மொழி பேசுபவர்கள் வாழும் நகராகும்.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது படையெடுத்தது தொடக்கம் கார்கிவ் நகர் இலக்கு வைக்கப்பட்டு வருகிறது.

நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட பல குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு கூறியது. கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்ய ஷெல் வீச்சுகளில் 21 வயது இந்திய மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட குறைந்து 10 பேர் கொல்லப்பட்டனர்.

கார்கிவில் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 112 பேர் காயமுற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யத் துருப்பினர் நகரைச் சுற்றி வளைத்திருந்தாலும் கார்கிவ் நகர் தொடர்ந்து உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படையெடுப்பு ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை 13 சிறுவர்கள் உட்பட குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனினும் உண்மையான எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

“யாரும் மன்னிக்க மாட்டார்கள். யாரும் மறக்க மாட்டார்கள்” என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி செவ்வாயன்று தெரிவித்தார்.

கார்கிவ் மற்றும் தலைநகர் கியேவில் தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீதான தாக்குதலை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருங்கடல் நகரான கெர்சனில் ரஷ்யா சோதனைச்சாவடிகளை அமைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நகரின் ரயில் நிலையம் மற்றும் துறைமுகத்தை ரஷ்யா கைப்பற்றியதாக நகரின் மேயர் இகோர் கலிகெய்வ் உள்ளுர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தவிர உக்ரைனின் பல நகரங்களிலும் ரஷ்ய உக்கிர வாய் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

உக்ரைனில் இருந்து 450,000 க்கும் அதிகமானவர்கள் அண்டை நாடான போலந்துக்கு தப்பிச் சென்றிருப்பதோடு மேலும் சுமார் 113,000 பேர் ருமேனியாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

Thu, 03/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை