வடக்கு,கிழக்கு அபிவிருத்திக்கு இந்திய அரசின் உதவி அவசியம்

இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை

இலங்கை - இந்தியாவுக்கிடையே  பயணிகள் படகு, சரக்கு கப்பல்  போக்குவரத்து, பலாலி - திருச்சி விமான சேவை ஆரம்பிக்கவும் கோரிக்ைக

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்குமிடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து, காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரிக்குமிடையிலான பயணிகள் படகு சேவை, பலாலி - திருச்சிக்கிடையிலான விமானப் போக்குவரத்து சேவை உட்பட வடக்கு கிழக்கில் முன்னெடுக்கபட வேண்டிய பல்வேறு அபிருத்தி திட்டங்களுக்கான கோரிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையளித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையே (28) நடைபெற்ற சந்திப்பின் போதே  மேற்படி விடயங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளிப்படுத்தப்பட்டன. இந்த சந்திப்பின்போது அமைச்சர் மேலும் முன்வைத்த கோரிக்கைகளில்,

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள்,

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமிடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து, காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரிக்குமிடையிலான பயணிகள் படகு சேவை, பலாலி - திருச்சிக்கிடையிலான விமானப் போக்குவரத்து சேவை,

காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான சிறந்த ஆரம்பமாக மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்பம் என்ற தனது வழிமுறையை தமிழ் தரப்புக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இச் சந்திப்பின் போது தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கலாசார விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் அடங்கிய கலாசார நிலையத்தை அமைத்து தந்தமைக்காக இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்கள் சார்பான தனது நன்றியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இரண்டு நாடு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில்,

பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. இதன்போது, இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார். இவ்வாறான பேச்சுவார்த்தைகளை வினைத்திறனாக தொடர்ந்தும் மேற்கொள்வதன் ஊடாக, இவ் விவகாரத்திற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை அடைய முடியுமென இரு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை வெளியிட்டனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான சுமார் 23 திட்டங்களைகளை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலதிக திட்டங்கள் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் வெளியிட்டார்.

Wed, 03/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை