ரஷ்யாவை தடுப்பதில் தாமதித்ததாக ஐரோப்பா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்யா மீது புதிய தடைகள் பற்றி அறிவிப்பு

ரஷ்யாவை தடுப்பதற்கு தாமதித்ததாக மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய கௌன்சில் மாநாட்டில் உரையாற்றிய அவர் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டில் ரஷ்யா செய்திருக்கும் அழிவுகள் மற்றும் சேதங்கள் பற்றி விளக்கிய அவர், ஐரோப்பா ஒன்றுபட்டு உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது பாணியில் உரையாற்றிய அவர், ரஷ்யாவை தடுப்பதில் அதிகம் தாமதித்து செயற்பட்டதாக ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்தார்.

‘நீங்கள் தடைகளை கொண்டுவந்தீர்கள். அதற்காக நாம் கடைமைப்பட்டுள்ளோம். அது கடுமையான நடவடிக்கை. ஆனால், அது சற்று தாமதமாக இருந்தது. இதனால் வாய்ப்பு ஒன்று இருந்தது’ என்று கூறிய அவர், தடுக்கும் வகையிலான தடைகளாக இருந்தால், ரஷ்யா போருக்குச் சென்றிருக்காது என்று சுட்டிக்காட்டினார்.

இதில் நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாயை சுட்டிக்காட்டிய அவர், அதனை ஆரம்பத்திலேயே முடக்கி இருந்தால், ‘ரஷ்யா எரிவாயு நெருக்கடியை உருவாக்கி இருக்காது’ என்றார்.

இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைனின் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி அண்டை நாடுகளிடம் அவர் கோரினார். ‘நான் இதனை உங்களிடம் கேட்கிறேன். தாமதிக்க வேண்டாம்’ என்றார். அண்மைய வாரங்களில் செலென்ஸ்கி பல உலக நாடுகளின் பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இதில் தமக்கு போதுமாக உதவத் தவறிய மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதற்கு அவர் தயங்கவில்லை.

பிரசல்சில் நடந்த மாநாடுகளில் ரஷ்யாவின் படையெடுப்பை காட்டுமிராண்டித் தனமானது என்று கண்டனம் வெளியிட்ட மேற்கத்திய தலைவர்கள், உக்ரைனுக்கு புதிய இராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க உறுதி அளித்தனர். இதில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளன.

எனினும் ஜப்பான் நேற்று ரஷ்யா மீதான தடையை மேலும் இறுக்கியதோடு அந்த நாட்டின் சாதகமான வர்த்தக அந்தஸ்த்தை அகற்றியது. மறுபுறம் ரஷ்யாவின் கூட்டாளியான பிரசல்ஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதேபோன்று 22 ரஷ்ய தனி நபர்கள் மீது அவுஸ்திரேலியா புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் 3.6 மில்லியன் உக்ரைனியர்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பதோடு பாதிக்கும் அதிகமான உக்ரைனிய சிறுவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்தப் போர் ஆரம்பித்து ஒரு மாதத்தை தாண்டியபோதும் ரஷ்யாவால் உக்ரைனின் எந்த பிரதான நகரங்களையும் கைப்பற்ற முடியாமல்போயுள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா அதன் இராணுவத் திறனை அழிப்பதே இலக்கு என்று தெரிவித்தது.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்கள் இடைவிடாது இடம்பெற்று வருகின்றபோதும் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள அதன் கவச வாகனங்கள் கடந்த ஒரு வாரமாக நகராது உள்ளது.

ரஷ்ய படைகளால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து வருவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

Sat, 03/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை