உக்ரைனில் ரஷ்யாவிடம் முதலாவது நகர் வீழ்ந்தது

தெற்கு உக்ரைனின் முக்கிய துறைமுக நகர் ஒன்றை ரஷ்ய படையினர் கைப்பற்றியதை அந்த நகர மேயர் உறுதி செய்துள்ளார்.

உக்ரைன் மீது படையெடுத்து ஒரு வாரம் எட்டி இருக்கும் நிலையில் கடும் மோதலுக்குப் பின் முதலாவது பிரதான நகராக கெர்சன் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளது.

ரஷ்ய துருப்புகள் நகர சபை கட்டடத்திற்குள் நுழைந்திருப்பதாகவும் நகரில் குடியிருப்பாளர்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இருப்பதாகவும் அந்த நகர மேயர் இகோர் கொலிகேவ் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடந்த மோதல்களில் பெரும் அழிவைச் சந்தித்த தினமாக பதிவான கடந்த புதன்கிழமை பல நகரங்களிலும் உக்கிர வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

உக்ரைன் ஆக்கிரமிப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி ரஷ்யா முதல் முறை தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் 498 துருப்புகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 1,597 பேர் காயமடைந்திருப்பதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. எனினும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் கூறுகிறது.

கடந்த வாரம் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் மக்கள் இத்தனை துரிதமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பது இதுவே முதல்முறை என்று அது கூறியது.

உக்ரைனின் தெற்கில் உள்ள 280,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கருங்கடல் துறைமுக நகரான கெர்சன் நகரை உக்ரைன் படை கைப்பற்றியது என்று நகர மேயர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனிய படையினர் நகரில் இல்லை என்றும் பொதுமக்கள் மீது சூடு நடத்த வேண்டாம் என்றும் ரஷ்ய படையினரை அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய படையினர் விதித்த நிபந்தனைகளை பின்பற்றும்படியும் அவர் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கருங்கடலை நோக்கி பாயும் ட்னீபர் நதிக் கரையில் அமைந்திருக்கும் கெர்சன் நகர் கைப்பற்றப்பட்டிருப்பது நாட்டிற்குள் ஆழ ஊடுருவுவதற்கு ஒரு தளமாக ரஷ்ய படையினருக்கு மாறியுள்ளது.

மறுபுறம் உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கார்கிவ் பயங்கர வான் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. ஷெல் குண்டுகள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து வரும் நிலையில் பொதுமக்கள் இடையே உயிர்ச் சேதம் அதிகரித்திருப்பதாக நகர மேயர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் தொடர்ச்சியாக பல மணி நேரம் ஷெல் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனினும் தலைநகர் கியேவை சுற்றிவளைக்கும் ரஷ்ய படைகளின் முயற்சி மந்தமடைந்துள்ளது. இதில் தலைநகரை நோக்கி வடக்கு பக்கமாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவ வாகனங்களின் அணிவகுப்பு ஒரு நாள் முழுவதும் ஸ்தம்பித்து காணப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலையில் தலைநகரில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. இரவு வானில் பாரிய தீப்பிழம்புகள் வெளிப்படும் காட்சிகள் பாதிவாகியுள்ளன. நகர மையத்தில் நான்கு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலின் இலக்குகள் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகவில்லை.

இந்த குண்டு வெடிப்புகள், கியேவ்வின் மத்திய ரயில் நிலையத்தில் அந்நகரத்தையே உலுக்கியபெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்தன. ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள பகுதிக்கு மிக அருகாமையில் இது நிகழ்ந்தது.

வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்த ஏவுகணையின் பாகங்கள் விழுந்து உட்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டதாக உக்ைரன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் கூறினார்.

முக்கியமான வெப்பமூட்டும் குழாய் ஒன்றும் சேதமடைந்ததாக, அவர் தெரிவித்தார். இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என, கியேவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

Fri, 03/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை