உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு கிடையாது

- பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. ஐ.நா மனித உரிமை பேரவை தனது விடயதானத்துக்கு அப்பாற்பட்டு இலங்கை மீது அழுத்தம் கொடுக்கிறது என தெரிவித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளக பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொறுப்பை ஒருபோதும் சர்வதேசத்திடம் ஒப்படைக்கமாட்டோமெனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கைக்கு சார்பாக 31 நாடுகள் ஆதரவு வழங்கின. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டதன் விளைவாக இக்கூட்டத்தொடர் சாதகமாக அமைந்தது.

நவீன யுகத்தில் பலம்வாய்ந்த நாடுகளினால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்தாமலிருப்பது அவதானத்திற்குரியது. இலங்கைக்கு எதிரான போலியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனை வருடத்தில் இருமுறை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது எத்தரப்பினருக்கும் சாதகமானதாக அமையாது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கத்தில் 80 சதவீதமானவை இலங்கையின் உள்ளக விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதிகார பகிர்வு, அரச நிர்வாகம் ஆகியவற்றில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தனது விடயதானத்துக்கு அப்பாற்பட்டு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கிறது. உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்க முடியாது என்ற இலங்கையின் நிலைப்பாட்டை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டன.

இலங்கைக்கு ஆதரவாக சாட்சியங்களை சேகரிக்க செலவழிக்கும் பல பில்லியன் டொலர் நிதியை கொவிட்19 தாக்கத்திலிருந்து மீள்வதற்கு முடியாமலும்,தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாமலும் உள்ள நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குமாறு பேரவையில் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

Fri, 03/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை