உக்ரைன் தலைநகரை நோக்கி ரஷ்ய படையினர் முன்னேற்றம்: விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு

புதிய நகரங்கள் மீதும் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கியேவின் வடமேற்கில் ரஷ்ய படைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக செய்மதி படங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. தலைநகர் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பிரிட்டன் நேற்று குறிப்பிட்டது.

வடக்கு உக்ரைனில் ரஷ்யாவின் பிரதான தாக்குதல் படையினர், படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே கியேவின் வடக்கு நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்தது. இதனால், தலைநகர் மீதான ரஷ்யாவின் ஆரம்பத் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்டன.

ஆனால் அமெரிக்காவின் தனியார் செய்மதி நிறுவனமான மக்சார் வெளியிட்ட படங்களில், கியேவின் வடமேற்கே ஹோஸ்டோமலில் உள்ள அன்டோனோவ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நகரங்களுக்குள்ளும் அதன் வழியாகவும் கவசப் படைகள் முன்னேறுவது தெரிகிறது. போர் ஆரம்பித்த விரைவில் இங்கு ரஷ்ய துருப்புகள் பரசூட்டில் இறங்கிய நிலையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பிரிவுகள் பீரங்கி தாக்குதல் நடத்தும் நிலையை நோக்கி வடக்கே லுபியங்காவின் சிறிய குடியேற்றத்திற்கு அருகில் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக மக்சார் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் புதிய தாக்குதல் செயற்பாடுகளுக்காக ரஷ்யா தனது படைகளை மீளமைத்தும் புதிய நிலைகளில் நிறுத்துவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு அதன் புதிய உளவுத் தகவல்களில் தெரிவித்துள்ளது. ‘இதில் தலைநகர் மீதான படை நடவடிக்கையும் உட்படலாம்’ என்றும் அது சுட்டிக்காட்டியது.

ஏற்பாட்டியல் பிரச்சினைகள் மற்றும் உக்ரைனின் வலுவான எதிர்ப்புக் காரணமாக ரஷ்யப் படைகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தையே கண்டிருப்பதாகவும் பிரிட்டனின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும் இழப்புகளுக்கு பின் ரஷ்யப் படைகள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்தது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரைன் தலைநகர் கியேவை நோக்கி ரஷ்ய படைகள் 5 கிலோமீற்றர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முற்றுகையில் உள்ள தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் ரஷ்யா தொடர்ந்து ஏழாவது நாளாகவும் போர் நிறுத்தத் திட்டத்தை அறிவித்தது. அந்த நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையானோரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ‘அது இன்று வெற்றி அளிக்கும் என்று நாம் நம்புகிறோம்’ என்று உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரிஷ்சுக் நேற்று தெரிவித்திருந்தார்.

மரியுபோலில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முந்தைய முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றன. அந்த நகரில் உணவு அல்லது குடிநீர் இன்றி தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கியுள்ளனர்.

மரியுபோலில் இருக்கும் பொது மக்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது ஒரு போர் குற்றம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு

பிரான்ஸின் வெர்சைலஸ் மாளிகையில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் ரஷ்யா மீது மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரினால் அடைக்கலம் பெற்றிருக்கும் 2.5 மில்லியன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பிலும் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்படும்.

உக்ரைன் மீதான படையெடுப்பு இரண்டு வாரங்களை கடந்திருக்கும் நிலையில் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்தும் கடுமையான தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் சாதாரண வர்த்தக உரிமைகளை நீக்கும்படி ஜி7 தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி கோருவார் என்று கூறப்படுகிறது. இது ரஷ்யாவின் பொருட்கள் மீது மேலும் வரி விதிப்பதற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உக்ரைன் நகரான ட்னிப்ரோ மீது நேற்று மூன்று வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதோடு அதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்றிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா இதுவரையில் தலைநகர் கியேவில் ஸ்தம்பித்து இருப்பதோடு உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கில் எந்த நகரையும் கைப்பற்றவில்லை. எனினும் அது தெற்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.

நேற்றுக் காலை ரஷ்ய படைகள், மேற்கு நகரங்களான லுட்ஸ்க் மற்றும் இவானோ-பிராங்கிவ்ஸ்க் விமான நிலையங்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் உட்பட புதிய தாக்குதல்களை ஆரம்பித்தது.

மேலும், இரண்டு வாரங்களுக்கு முன் படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து முதன்முறையாக அவர்கள் மத்திய-மேற்குப் பகுதியின் கோட்டையாகக் கருதப்படும் டினிப்ரோ மீதும் குண்டு வீசியுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நகரங்களில் இருந்து அகதிகள் உக்ரைனின் மேற்குப் பகுதி பாதுகாப்பானது என்று நம்பி வெளியேறி வருகின்றனர். அதில் பெரிய சிவிலியன் மையமான வீவ் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அதற்கு இருபுறமும் உள்ள நகரங்கள் மீது நடக்கின்றன.

Sat, 03/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை