உக்ரைனில் ரஷ்யாவின் முற்றுகையிலுள்ள நகரங்களில் புதிய மனிதாபிமானப் பாதை

உக்ரைனில் முற்றுகையில் இருக்கும் நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு ரஷ்யா நேற்றும் புதிய மனிதாபிமானப் பாதைகளை அமைத்தது.

ரஷ்யப் படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தி வரும் ஐந்து நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வழி அமைக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. எனினும் ரஷ்யா உண்மையாக பொதுமக்களை வெளியே அனுமதிப்பதில்லை என்று குற்றம்சாட்டி இருக்கும் உக்ரைன் கடந்த செவ்வாய்க்கிழமையும் அவ்வாறான மனிதாபிமானப் பாதை மீது குண்டு வீசியதாகக் கூறியது.

“இவ்வாறான செயற்பாடு இனப்படுகொலையைத் தவிர வேறு இல்லை” என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய அகதிகள் பிரச்சினையை உருவாக்கி இருப்பதோடு, இதற்கு பதிலடியாக மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

ரஷ்யாவுடன் போராடுவதற்கு மேலும் உதவி தேவைப்படுவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி முறையிட்டுள்ளார். ரஷ்யப் படை உக்ரைனில் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நலையில் தலைநகர் கியெவ், துறைமுக நகர் மரியுபோல் மற்றும் கார்கிவ், சுமி மற்றும் செர்னிஹிவில் புதிய மனிதாபிமானப் பாதைகள் நேற்று திறக்கப்பட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த மோதல் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த மனிதாபிமான பாதை வழியாக பலரும் தப்பிச் சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு நகரான சுமியில் இருந்து குறைந்து 5,000 பேர் வெளியேறி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்த நகரில் இடம்பெற்ற கடும் மோதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கியேவின் வெளிப்புற பகுதியில் இருந்து வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

எனினும் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சி பல தடவைகள் தடங்கலுக்கு உள்ளாகியது. இங்கிருந்து சிறுவர்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியேற ரஷ்யா மறுத்ததாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

“இந்த நிலைமை உண்மையில் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதோடு நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது” என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் எவான் வொட்சன் தெரிவித்துள்ளார்.

ஆறு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் இடிபாடுகளுக்குக் கீழ் நீரிழப்புக் காரணமாக உயிரிழந்திருப்பதாக மரியுபோல் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நீர், மின்சாரம் மற்றும் வெப்பமூட்டும் வசதி ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கியேவில் உக்ரைன் படைகள் கடும் எதிர்ப்பை காட்டியபோதும் ரஷ்ய துருப்புகள் மெதுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது. எனினும் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ரஷ்யா வேகமாக முன்னேறுகிறது.

தலைநகரை நோக்கி முன்னேறுவதில் புறநகர் பகுதியான இர்பின் தீர்க்கமான புள்ளியாக உள்ளது. இங்கு பொதுமக்கள் பனிக்காற்று மற்றும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வெளியேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ரஷ்ய படையின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு உக்ரைன் படைகள் இர்பின் நதிக்கு மேலால் இருக்கும் பாலத்தை தகர்த்த நிலையில் பலகை மற்றும் இரும்பினாலான தற்காலிக பாதை ஊடாக அந்த நதியை கடக்க நீண்ட வரிகையில் மக்கள் காத்துள்ளனர்.

“நான் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் எம்மைச் சூழ இருக்கும் வீடுகளில் எவரும் இல்லை. குடிநீர், எரிவாயு, மின்சாரம் எதுவும் இல்லை” என்று 43 வயதான லரிசா புரொகொபட்ஸ் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் வீடியோ மூலம் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி, “நாம் காடுகள், பயிர் நிலங்கள், கரைகள், வீதிகளில் இருந்து போராடுவோம்” என சூளுரைத்தார். இதன்போது செலென்ஸ்கியுக்கு எம்.பிக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

Thu, 03/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை