4,000 கொள்கலன் வாகனங்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

டீசல் பற்றாக்குறை காரணமாம்

டீசல் தட்டுப்பாடு காரணமாக, கொள்கலன்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாகவும் இதுவரை நான்காயிரம் கனரக வாகனங்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கொள்கலன் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் மஞ்சுள தெரிவித்தார். நாட்டுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவுகளையும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும் தமது சங்கத்தினால் சுமார் இரண்டாயிரம் கனரக வாகனங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகன சங்கங்களும் சேவையிலிருந்து விலகியுள்ளன.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் உள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும் நாளாந்தம் எரிபொருள் நிலையங்கள் முன்பாக நீண்ட வாகன வரிசையே காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் நீண்ட வாகன வரிசைகளை அவதானிக்க முடிந்தது. டீசல், பெற்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் தமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாததன் காரணத்தினால் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நெருக்கடியை சமாளிக்க முடியாது மக்கள் பொறுமையிழக்கும் நிலைமையை இது வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே, இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் நாட்டுக்கு தேவையான எரிபொருளுடன் 10 கப்பல்கள் இலங்கையை வந்தடையும். எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க மாட்டோம். புதுவருட காலத்தில் ஒருபோதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.

 

 

Sat, 03/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை