வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 132 பேருக்கு Interpol சிவப்பு எச்சரிக்கை

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகளிலேயே மறைந்து வாழ்வதாக தகவல்

 

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 132க்கும் அதிகமான நபர்களுககு எதிராக 'சர்வதேச பொலிஸ்' சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிப்போர் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய அதிகளவிலானோர் நாட்டிலிருந்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் மறைந்து வாழ்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், துபாய் போன்ற நாடுகளிலேயே மறைந்து வாழ்வதாக அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் விசேட விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் விசேட செயலணி, சுங்கம் மற்றும்  கடற்படையினரின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அவ்வர்த்தகம் ஊடாக அவர்கள் ஈட்டிக்கொண்டுள்ள வருமானத்தின் மூலம் உரிமையாக்கிக் கொண்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதுடன் நிதியை பணச்சலவை செய்வதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் சட்ட விரோதமாக பெற்றுக்கொண்டுள்ள சொத்துக்களை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை