உக்ரைனில் 11ஆவது நாளாக ரஷ்யப் படை கடும் தாக்குதல்

அகதிகள் ஒன்றரை மில்லியனாக உயர்வு

உக்ரைன் மீதான தாக்குதல்களை நேற்று 11 ஆவது நாளாகவும் ரஷ்யா உக்கிரப்படுத்திய நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியனைத் தொட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகள் மற்றும் ஆயுத உதவிகள் என மேற்குலக நாடுகளிடம் இருந்து உக்ரைன் மேலும் உதவிகளை கோரியுள்ளது.

ரஷ்ய படைகளின் முற்றுகையில் இருக்கும் இரு தெற்கு நகரங்களான மிரியுபோல் மற்றும் வொல்னொவகாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் போர் நிறுத்தம் ஒன்று கடந்த சனிக்கிமை தோல்வி அடைந்ததற்கு இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. உக்ரைனியர்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஏனைய பகுதிகளில் அடைக்கலம் பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள நகரங்களில் இருக்கும் மக்கள் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போராடும்படி கடந்த சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய உக்ரைன ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

“நாம் வெளியே வந்து எமது நகரங்களில் இருக்கும் இந்தக் கொடியவர்களை துரத்த வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், தமது தேசத்தை கட்டியெழுப்புவதாக உறுதி அளித்தார்.

உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யா மீது தடைகளை தீவிரப்படுத்தி இருக்கும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் போலந்து எல்லையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனை சந்தித்த உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ட்மிட்ரோ குலெபா, எதிர்வரும் நாட்களில் புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டிருப்பதோடு நெருக்கடிக்கு பதிலளிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 10 பில்லியன் டொலர் அவசர நிதியுதவியுடன், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கலாம் என்று பலரும் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க எம்.பிக்களுடன் வீடியோ அழைப்பு ஒன்றின் மூலம் பேசிய செலென்ஸ்கி ஐரோப்பிய கூட்டாளிகளிடம் இருந்து விமான உதவிகளைக் கோரினார். இதன்போது மேலும் ஆயுத உதவிகளைக் கேட்ட அவர் ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடை விதிக்கவும், வான் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைக்கவும் கோரியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பைடன் மற்றும் செலென்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதோடு இதில் பாதுகாப்பு, உக்ரைனுக்கான நிதியுதவி மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ச்சியாக தடைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக உக்ரைன் தலைவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய படைகளால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் மரியுபோல் நகரில் கடந்த சில நாட்களால் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில் அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி உள்ளனர்.

“வீதியில் இருக்கும் அனைத்து உடல்களையும் எம்மால் சேகரிக்க முடியாதுள்ளது” என்று பிரதி மேயர் செர்கெய் ஓர்லோவ் சி.என்.என் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கையை கணக்கெடுக்க முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 350க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

வொல்னோவாகாவில் இருந்து தப்பிச்செல்லும் குடியிருப்பாளர்கள் பின்னணியில் கடும் ஷெல் குண்டு சத்தங்கள் கேட்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகர் கியேவுக்கு வெளியில் 40 மைல் நீண்ட ரஷ்ய இராணுவ வாகனத் தொடரணி தொடர்ந்து ஸ்தம்பித்த நிலையில் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் இயன்றவரை தேர்வு செய்யப்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடமேற்கு கியேவின் இர்பின் நகரில் கடும் மோதல் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹொஸ்டோமல் விமானத்தளத்திற்கு அருகிலேயே இந்த நகர் உள்ளது.

 

Mon, 03/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை