SLBC யில் பியானோ கருவிகள் 03 மாயம்!

ஹட்சன் முறையீடு; CID விசாரணை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கென இறக்குமதி செய்யப்பட்ட பெறுமதிமிக்க மூன்று புராதன பியானோ இசைக் கருவிகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முன்தினம் (17) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல உத்தரவிட்டார்.

பெளத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கடந்த 2021 ஜூலை மாதம் முதலாம் திகதி சிஐடியில் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்ததாக விசாரணை அதிகாரிகள் நேற்று முன்தினம் கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தனர். இதன்போதே கொழும்பு பிரதான நீதிவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சட்ட அதிகாரியான சம்பா சமன்மலி பெரேரா என்பவரின் வாக்குமூலம் பெறப்பட்டதாக நீதிமன்றுக்கு அறிவித்த விசாரணையாளர்கள், இதுவரையிலான விசாரணைகளுக்கமைய 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவில் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு – 2 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க தலைமையிலான விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்தனர்.

Sat, 02/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை