CEB,CPC நிறுவனங்களுக்கு தேவையான நிதி விடுவிப்பு

ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அறிவிப்பு

 

மின்சார சபைக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் தேவையான நிதியை விடுவிக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மின்சார மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பாகவும் மின்சார சபைக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் நிதி விடுவிக்க வேண்டாம் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

மின் வெட்டினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். மின்வெட்டு தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்தல் வழங்கியுள்ளது. முன்கூட்டி அறிவித்து உரிய நேரங்களில் மாத்திரமே மின்வெட்டு செயற்படுத்தப்படும். ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். இரு நிறுவனங்களுக்கும் தேவையான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். நெருக்கடி நிலை இருப்பதை ஏற்கிறோம். ஆனால் இந்த நிலைமையை முடிந்தளவு கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொள்வனவுகளை மேற்கொள்ள ஆவன செய்யப்பட்டுள்ளது. மீள எரிபொருள் விலை உயருமா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இரு நிறுவனங்களும் நஷ்டத்துடனே இயங்குகின்றன. எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் முடிவு எடுக்கப்படவில்லை.உலக சந்தையயில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் நன்மை மக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். (பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 02/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை