உக்ரைனின் மீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பதற்கு தொடர்ந்தும் வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி பைடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பதற்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அவ்வாறான நடவடிக்கைக்கு தீர்க்கமான முறையில் பதலளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று தொலைக்காட்சியில் தேசிய அளவில் உரையாற்றிய பைடன் குறிப்பிட்டார்.

ரஷ்யா தற்போது உக்ரைனுடனான எல்லையில் சுமார் 150,000 துருப்புகளை குவித்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உக்ரைன் எல்லையில் இருந்து சில துருப்பினர் வாபஸ் பெறப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும் இது உறுதி செய்யப்படவில்லை என்று பைடன் கூறினார்.

“(ரஷ்ய படையினர் வெளியேறுவது) நல்லதாக இருக்கும். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ரஷ்ய இராணுவப் பிரிவுகள் தமது முகாம்களுக்கு திரும்புவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

“உண்மையில், அவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் நிலை ஒன்றில் இருப்பதாக எமது ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்” என்று பைடன் தெரிவித்தார்.

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இரு வங்கிகளின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக அந்த நாடு கடந்த செவ்வாயன்று தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி உறுதி செய்யப்படாதபோதும் அது ரஷ்யா மீது குற்றம்சாட்டுகிறது.

உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பு ஒன்றுக்கு பதில் சைபர் தாக்குதல் போன்ற பாதிப்புகளை செய்ய ரஷ்ய முயல்வதாக கவலை இருந்து வருகிறது. அவ்வாறான நடவடிக்கைகளுக்கு பதில் கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு பற்றிய கவலைக்கு விடை காணப்படும் என்றும் அது பற்றி தீவிரமாக எடுத்துக்கொள்வோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்த நிலையிலேயே பைடனின் உரை வந்துள்ளது.

ஆக்கிரமிப்புத் தொடுக்கும் திட்டத்தை புட்டின் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஐரோப்பாவில் மற்றொரு போரை விரும்பவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். என்றாலும் கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் பிராந்தியத்தில் பதற்ற சூழல் நீடித்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தும் என்று ஆரம்பத்தில் அமெரிக்க உளவுத் தகவல்கள் கூறின. அன்றைய தினம் ஒற்றுமையின் நாளாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ் அறிவித்தார். நாட்டுமக்களை தேசியக் கொடியை ஏற்றும்படியும் உக்ரைன் தேசியக் கொடி நிறமான நீலம் மற்றும் மஞ்சள் ரிப்பன்களை அணியும்படியும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

முன்னாள் சோவியட் குடியரசு ஒன்றான உக்ரைன் ரஷ்யாவுடன் ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவைக் கொண்டுள்ளது.

அந்த நாடு மேற்கத்தேய இராணுவக் கூட்டணியான நேட்டோவில் இணையாமல் இருப்பதை உறுதி செய்ய ரஷ்யா விரும்புகிறது. நேட்டோவின் விரிவாக்கம் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அது குறிப்பிடுகிறது. எனினும் உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்று ரஷ்யாவின் கோரிக்கையை அந்த அமைப்பு நிராகரிக்கிறது.

ரஷ்ய அரசினால் முன்மொழியப்பட்ட உடன்படிக்கை தொடர்ந்து இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது என்று பைடன் கூறுகிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், அதனால், அமெரிக்காவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

“ஜனநாயகத்துக்கும், விடுதலைக்கும் பாதுகாப்பாக நிற்கும்போது அதற்கு ஒரு விலை தர வேண்டியிருக்கும் என்பதை அமெரிக்க மக்கள் உணராதவர்கள் அல்ல. இது வழியில்லாமல் நடக்கும் என்று நான் பாசாங்கு செய்யமாட்டேன்,” என்றும் பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க நிர்வாகம் தற்போது விநியோக பிரச்சினை வராமல் இருக்க ஆற்றல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்பவர்கள் உடன் வருங்கால திட்டத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

மேலும் பைடன் கூறுகையில், உக்ரைன் ஆக்கிரமிப்பு நடந்தால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் நோர்ட்ஸ்ட்ரீம் 2 இயற்கை எரிவாயு குழாய் திட்டம் நடக்காது என்றும் கூறினார். “ரஷ்ய குடிமக்களுக்கு நான் கூற விரும்புவது: நீங்கள் எங்கள் எதிரிகள் அல்ல, அதே சமயத்தில் ஒரு அழிவு நிறைந்த போரை நீங்கள் உக்ரைனில் நிகழ்த்த விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பைடன்.

Thu, 02/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை