கைதாகியுள்ள ஆலய பணியாளரை சந்தித்தார் பேராயர் கர்தினால்

கொழும்பு புஞ்சி பொரளை அனைத்து புனிதர்களின் ஆலயத்தில் குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்தின் பணியாளரான பிரான்சிஸ் முனீந்திரனை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

அவருடன் அங்கு சென்றுள்ள கொழும்பு உயர் மறைமாவட்ட தொடர்பாடல் பணிப்பாளர் ஜூட் கிருஷாந்த அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:

மேற்படி ஆலயத்தில் இடம்பெறவிருந்த அழிவை தடுப்பதற்கு பிரான்சிஸ் முனீந்திரன் என்ற ஆலயத்தின் பணியாளர் செயற்பட்டுள்ளார். அவர் குற்றமற்றவர் என்பதால் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவர் தொடர்பில் பேராயருக்கு பெரும் மரியாதை உள்ள நிலையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இந்த குண்டை ஆலயத்தில் வைத்தவர் தனிப்பட்ட காரணங்களுக்காக அதை வைக்கவில்லை. இது ஒரு சூழ்ச்சியான செயற்பாடு என்பதாகவே நாம் கருதுகிறோம்.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை மறக்கடிக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் நாம் சந்தேகப்படுகின்றோம். அத்துடன் கடந்த ஜனவரி 14ம் திகதி நாம் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட மதவழிபாட்டு நிகழ்வுகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவெனவும் சந்தேகிக்க முடிகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை