கடன் செலுத்துகையினை பிற்போட்டாலேயே அந்நியச்செலாவணி கையிலிருக்கும்

நாட்டின் கடனை திரும்பச்செலுத்த வேண்டியவர்களோடு உடனடியாக ஒரு பேச்சு வார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்தாலே அந்நியசெலாவணி கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவிற்கு நேற்று (12)  விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்கள் சிலரை அழைத்திருந்தேன். ஜனவரி 27 ஆம் திகதி மூடிய அறைக்குள்ளே அந்த கலந்துரையாடலை நடாத்தியிருந்தோம். இது தொடர்பாக எங்களுக்கு தெளிவூட்டுவதற்காக சில பொருளாதார நிபுணர்களையும் நாங்கள் அழைத்திருந்தோம். அவர்களுடனான கலந்துரையாடலின் போது சரித்திரத்திலே என்றுமே இல்லாத அளவுக்கு எமது பொருளாதார நிலமை வீழ்ச்சியடைந்திருப்பதை உணர முடிகின்றது.

எனவே இதிலிருந்து மீள்வதற்காக நாம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம். அத்துடன் அரசாங்க தரப்பில் நாம் கோர வேண்டிய 3 விடயங்கள் குறித்தும் ஒருமித்திருந்தோம்.

அது தொடர்பாக 12 பேர் எழுத்துமூலம் கைச்சாத்திட்டு அதனை வெளிப்படுத்தியிருக்கிறோம், அதில் முதலாவதாக கடன் திரும்பச்செலுத்த வேண்டியவர்களோடு உடனடியாக ஒரு பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க வேண்டும். அப்படியாக ஆரம்பித்து கடன் செலுத்துகின்ற திகதிகளை பிற்போட்டு செலுத்தும் தொகை தொடர்பாகவும் அவர்களுடன் பேச்சு வார்த்தையினை நடாத்தினால் தான் அந்நியசெலாவணி உடனடியாக கையிலே கிடைக்கும்.

கிடைக்கும் அந்த அந்நிய செலாவணியை அத்தியவசியமாக உணவு மருந்து எரிபொருள் போன்ற விடயங்களை கொள்வனவு செய்வதற்காக நாங்கள் விநியோகிக்க வேண்டும். இந்தப்பேச்சு வார்த்தைகளின் போது நிபந்தனைகள் சிலவற்றிக்கு நாம் இணங்க வேண்டிவரும். அந்த நிபந்தனைகள் எதுவுமே எமது நாட்டில் இருக்கின்ற ஏழைமக்களை தாக்காதவாறு நாம் பார்த்து கொள்ள வேண்டும். அவர்களது பாதுகாப்புக்காக நாட்டிலே இருக்கும் அரண்களை நாம் தகர்க்க விடக்கூடாது. அதுகுறித்து நாம் கவனெமெடுத்து இந்த பேச்சுவார்த்தையிலே ஈடுபட வேண்டும். ஆகிய முன்மொழிவுகளை நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டியது அத்திய அவசியம். காலம் செல்ல செல்ல இது தொடர்பாக இன்னும் கூடுதலான பிரச்சனைக்குள்ளே நாடுசெல்ல வேண்டிவரும். எனவே உடனடியாக இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டால்தான் நாம் இந்த கடன் திரும்ப செலுத்தும் விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரக்கூடியதாக இருக்கும் என்றார்.

ஓமந்தை விஷேட நிருபர்

Sun, 02/13/2022 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை