ரஷ்யாவை போருக்கு இழுப்பதாக அமெ. மீது புட்டின் குற்றச்சாட்டு

உக்ரைனில் ரஷ்யாவை போருக்கு இழுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ரஷ்யா மீது மேலும் தடை விதிப்பதற்கு சாக்காக மோதல் ஒன்றை பயன்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி படைகள் பற்றிய ரஷ்யாவின் கவலையை அமெரிக்கா பொருட்படுத்தாமல் இருப்பதாகவும் புட்டின் கூறினார்.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு தொடுக்கவிருப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டணி குற்றஞ்சாட்டுகின்றபோதும், ரஷ்யா அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

மொஸ்கோவில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், பேசிய புடின், “உக்ரைனின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பெரிதாக அக்கறை காட்டவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ரஷ்யாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுதான் அதன் முக்கிய பணி. இந்த இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக உக்ரைன் இருப்பதாக நினைக்கிறேன்” என்றார்.

இதேவேளை ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போராக மாத்திரம் இருக்காது என்றும் ஐரோப்பாவில் முழு அளவிலான போர் ஒன்றாக இருக்கும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Thu, 02/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை